×

பழநி வனப்பகுதியில் தீத்தடுப்பு கோடு அமைக்க நடவடிக்கை

பழநி, மார்ச் 3: தினகரன் செய்தி எதிரொலியாக பழநி வனப்பகுதியில் தீத்தடுப்பு கோடு அமைக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்திலேயே 18 ஆயிரம் ஹெக்டேர் பரப்பில் பெரிய வனப்பரப்பை கொண்டது பழநி வனச்சரகம். இங்கு வரிப்புலி, சிறுத்தை, கரடி, மான், கேளையாடு, யானை, காட்டெருமை, காட்டுப்பன்றி போன்ற விலங்கினங்கள் அதிகளவு உள்ளன. தவிர, சந்தனம், தேக்கு, ஈட்டி போன்ற விலை உயர்ந்த மரங்களும், அரிய வகை மூலிகைகளும் அதிகளவில் உள்ளன. இதனால் இவ்வனப்பரப்பில் வெளியாட்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது வனப்பகுதியில் உள்ள மரங்களும், செடிகளும் காய்ந்து போய் உள்ளன. ஏராளமான சருகுகள் உதிர்ந்து கிடக்கின்றன. இந்நிலையில் பகல் நேரங்களில் தற்போது வெயில் கொளுத்த துவங்கி உள்ளது. இந்த வெயிலின் காரணமாக சருகுகளின் மூலம் வனப்பகுதிக்குள் தீவிபத்து ஏற்படும் அபாயம் நிலவுகிறது. காட்டுத்தீ ஏற்பட்டால் வனப்பகுதியில் உள்ள விலை உயர்ந்த மரங்கள், அரிய வகை மூலிகைகள் மற்றும் வனவிலங்குகள் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை கோடைகாலம் துவங்குவதற்கு முன்பே வனத்துறையினர் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வது வழக்கம்.ஆனால் இந்த ஆண்டு அதற்கான பணிகள் துவங்கப்படாமல் இருந்தது. இதுகுறித்து தினகரன் நாளிதழில் கடந்த வாரம் செய்தி (பிப்ரவரி 13) வெளியிடப்பட்டது. இதன் எதிரொலியாக பழநி வனப்பகுதியில் வனத்துறையினர் தீத்தடுப்புக்கோடு அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து பழநி வனச்சரகர் (பொ) விஜயன் கூறியதாவது,பழநி வனப்பகுதியில் கடந்த காலங்களில் அதிகளவு தீவிபத்துகள் ஏற்பட்ட இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இதன்மூலம் சுமார் 22 கிலோமீட்டர் தூரத்திற்கு தீத்தடுப்புக்கோடு அமைக்கப்பட உள்ளது. தற்போது வனத்துறை ஊழியர்கள், வேட்டைத்தடுப்பு காவலர்கள் மூலம் தீத்தடுப்புக்கோடு அமைக்கும் பணி நடந்து வருகிறது. தவிர, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளின் வாகனங்களை சோதனை செய்து தீப்பற்றும் பொருட்களை அப்புறப்படுத்தி வருகிறோம். மேலும், மலை கிராமங்களில் வசிக்கும் மக்களிடம் தீவிபத்து ஏற்பட்டால் தெரிவிக்க வேண்டிய செல்போன் எண்கள், தீயை அணைக்கும் வழிமுறைகள் உள்ளிட்டவை குறித்து விழிப்புணர்வு நோட்டீஸ்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : fire brigade ,forest ,Palani ,
× RELATED சாத்தூர் அருகே சுப்பிரமணியபுரத்தில் உள்ள பட்டாசு ஆலையில் தீ விபத்து