×

போலீசார் பறிமுதல் செய்த வாகனங்களின் டயர்கள் தீ வைத்து எரிப்பு டிஎஸ்பியிடம் உரிமையாளர் புகார் செய்யாறு அருகே மணல் கடத்தியதாக

செய்யாறு, மார்ச் 3: செய்யாறு அருகே மணல் கடத்தியதாக போலீசார் பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களின் டயர்கள் கழற்றப்பட்டு, தீ வைத்து எரித்திருப்பதாகவும், இவற்றை சரிசெய்து தரவேண்டும் என அதன் உரிமையாளர், டிஎஸ்பியிடம் புகார் அளித்துள்ளார்.

செய்யாறு அடுத்த புளியரம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் அன்பு(50). இவர் நேற்று முன்தினம் டிஎஸ்பி சுந்தரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
‘கடந்த 2018ம் ஆண்டு எனக்கு சொந்தமான ஜேசிபி மற்றும் டிப்பர் லாரியை புதுப்பாளையம் கிராமத்தில் உள்ள உறவினரின் பழைய வீட்டை இடிப்பதற்காக அனுப்பி வைத்தேன். அப்போது, தூசி காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் துரைசாமி மற்றும் போலீசார் மணல் கடத்துவதாக கூறி வாகனங்களை பறிமுதல் செய்து பொய்யாக வழக்கு பதிவு செய்தனர்.

இதனால், நான் செய்யாத குற்றத்திற்காக கடந்தாண்டு மார்ச் மாதம் 79 ஆயிரத்து 700 அபராதம் செலுத்தினேன். தற்போது, லாரியை மீட்க நீதிமன்ற உத்திரவின்படி, தூசி காவல் நிலையம் சென்றேன். அப்போது, அங்கிருந்த எனது லாரியில் இருந்த டயர்கள் கழட்டப்பட்டும், தீயிட்டு எரிக்கப்பட்டும் இருந்தது.

மேலும், ஜேசிபி வாகனத்தின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டிருந்தது. எனவே, போலீசார் கட்டுப்பாட்டில் இருந்த என்னுடைய வாகனத்தை சேதப்படுத்தியது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும். மேலும், எனது வாகனத்தை சரிசெய்து நல்ல முறையில் ஒப்படைக்க வேண்டும்’. இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். மனுவை பெற்றுக்கொண்ட டிஎஸ்பி சுந்தர் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

Tags : owner ,
× RELATED பார் உரிமையாளர்களிடம் ரூ.25 கோடி லஞ்சம்:...