×

குடியிருப்பை ஒட்டிய வனப்பகுதிகளில் இறைச்சி கழிவுகளால் மனித-வனவிலங்கு மோதல் அதிகரிப்பு

ஊட்டி, மார்ச். 2:நீலகிரி  மாவட்டத்தில் வனப்பகுதிகள் மற்றும் சாலையோரங்களில் கோழி இறைச்சி கழிவுகளை  கொட்டுவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என வனத்துறை வலியுறுத்தி உள்ளது.  நீலகிரி  வனப்பரப்பு மிகுந்த மாவட்டமாக விளங்கி வருகிறது. இங்கு பல்வேறு வகையான  அரிய வகை வன விலங்குகளும், மரம், செடி கொடிகள் உள்ளன. நீலகிரியின்  சுற்றுசூழலை பாதுகாக்கும் பொருட்டு பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டிற்கு  தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் தூய்மையான மாவட்டமாக மாற்ற மாவட்ட  நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. திடக்கழிவு மேலாண்மை  திட்டத்தின் கீழ் குப்பைகள் சேகரிக்கப்பட்டு அவை மறு சுழற்சி, காய்கறி  கழிவுகள் உள்ளிட்ட மக்கும் குப்பைகளை கொண்டு இயற்கை உரம் தயாரித்தல்  போன்றவைகளும் ேமற்கொள்ளப்பட்டு வருகிறது.

 இதனிடையே பொதுமக்கள் சிலர்  குப்பைகளை முறையாக அகற்றாமல் குடியிருப்பை ஒட்டியுள்ள வனப்பகுதிகளில்  பிளாஸ்டிக் குப்பைகளை கொட்டி வருகின்றனர்.  இதனால் பிளாஸ்டிக் போன்ற  பொருட்களை சாப்பிட்டு காட்டுமாடு, மான் போன்ற வன விலங்குகள் இறக்க கூடிய  அபாயம் உள்ளது மட்டுமின்றி சுற்றுசூழல் பாதிக்கப்படுகிறது.  இதுதவிர  கிராம பகுதிகளில் இறைச்சி கடைகள் வைத்துள்ளவர்கள் மீதமான கோழி இறைச்சி  கழிவுகளை குழி தோண்டி புதைக்காமல், வனப்பகுதிகளில் வீசுகின்றனர். இதனால்  துர்நாற்றம் வீசுவது மட்டுமின்றி வாசத்தால் கவரப்படும் சிறுத்தை உள்ளிட்ட  வன விலங்குகள் கிராமத்தை ஓட்டிய பகுதிக்கு வருகின்றன.

 இவற்றை  சாப்பிட்டு பழகிய அவை அடிக்கடி அங்கு வருகின்றன. சில சமயங்களில் ஊருக்குள்  புகுந்து கோழி, ஆடு போன்றவற்றை கடித்து கொன்று விடுகின்றன. இதுபோன்ற  கழிவுகளை சாப்பிட பன்றிகளும் அதிகளவு படையெடுக்கின்றன.  இதேபோல்  காய்கறி கழிவுகளையும் வனத்திற்குள் கொட்டுகின்றனர். இதனால் கரடி,  காட்டுமாடு, பன்றி உள்ளிட்ட வன விலங்குகள் குடியிருப்பை ஒட்டியுள்ள  பகுதிகளுக்குள் வருகின்றன. இதனால் நீலகிரி வன கோட்டத்தை மனிதன் - வனவிலங்கு  மோதல்கள் ஏற்படுகின்றன. எனவே பொதுமக்கள் வனப்பகுதிகளில் காய்கறி  கழிவுகள், இறைச்சி கழிவுகள் கொட்டுவதை தவிர்க்க வேண்டும். மீறி  வனப்பகுதிகளுக்குள் பிளாஸ்டிக் மற்றும் உணவு கழிவுகளை கொட்டுபவர்கள் மீது  நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘நீலகிரி  வன கோட்டத்தை பொறுத்த வரை காட்டு மாடுகள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதன்  காரணமாக இதேபோல் கரடி நடமாட்டமும் உள்ளது. தேயிலை செடிகள், உன்னி புதர்  செடிகளுக்கு மத்தியில் அவை மறைந்து கொள்ள வசதியாக உள்ளது. எனவே வனத்தை  ஒட்டியுள்ள கிராம பகுதிகளில் வசிக்க கூடிய பொதுமக்கள் தங்கள்  குடியிருப்புகளுக்கு அருகில் உள்ள புதர்களை அகற்ற வேண்டும். மேலும் காய்கறி  கழிவுகள், இறைச்சி கழிவுகள் வனத்திற்குள் கொட்டப்படும் சம்பவங்கள் அதிகம்  நடக்கிறது. காய்கறி கழிவுகள் மற்றும் இறைச்சி கழிவுகளை உண்ண வர கூடிய வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் வர கூடிய நிலை உள்ளது. இதனால்  மனிதன் - வன விலங்கு மோதல்கள் ஏற்படுகிறது.
எனவே ஆபத்தை உணராமல் வனப்பகுதியையோட்டி குடியிருப்பு ஓரம் இறைச்சி கழிவு கொட்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Tags : areas ,
× RELATED நகர்புறங்களில் வசிக்கும் மக்களில்...