×

இரும்பு முள்வேலி, படிக்கட்டுகள் அமைப்பு சின்னச்சுருளி அருவியில் சீரமைப்பு பணி சுற்றுலாப் பயணிகளுக்கு தடை

வருஷநாடு, மார்ச் 2: வருசநாடு அருகே, கோம்பைத் தொழு மலையடிவாரத்தில் உள்ள சின்னச்சுருளி அருயில் படிக்கட்டுகள், இரும்பு முள்வேலி, குளிக்க வசதியாக இரும்பு கைப்பிடிகள் என வனத்துறை சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதனால், சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதித்துள்ளது.தேனி மாவட்டம், வருசநாடு அருகே, கோம்பைத்தொழு மலையடிவாரத்தில் சின்னச்சுருளி அருவி அமைந்துள்ளது. இங்கு மேகமலை வனத்துறை சார்பில், கடந்த சில நாட்களாக பராமரிப்பு பணி நடைபெற்று வருகிறது. அருவியில் நீர்வரத்தும் மிக குறைவாக உள்ளது. இதனால், அருவிக்கு சுற்றுலாப் பயணிகள் வருவதற்கு தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மேகமலை வனத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘அருவியைச் சுற்றியும் முள்வேலி அமைத்து, படிக்கட்டுகள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் குளிப்பதற்கு வசதியாக இரும்பு கம்பி அமைத்து பராமரிக்க உள்ளோம். இதனால், சுற்றுலாப் பயணிகள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தேனி, கம்பம் சின்னமனூர், மதுரை, புதுச்சேரி உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் மிகுந்த ஏமாற்றத்துடன் செல்கின்றனர். மேலும், சின்னச்சுருளி அருவி, 20க்கும் மேற்பட்ட மலைக் கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கி வருகிறது. சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக்காக பணிகளை மேற்கொண்டுள்ளோம். அருவியில் வரும் குறைந்த நீரிலும் குளிக்க தடை விதித்துள்ளோம்’ என்றனர்.

இது குறித்து கோம்பைத்தொழு ஒன்றியக் கவுன்சிலர் முருகன் கூறுகையில், ‘சின்னச்சுருளி அருவியை பாதுகாக்கவும், சிறந்த சுற்றுலாத் தலமாக மாற்றுவதற்கும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக்கும், வனத்துறை சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறோம். அருவிக்கு வரும் பெண்கள் பாதுகாப்பாக குளிக்கவும்,பணிகள் நடைபெற்று வருகிறது. நிதி பற்றாக்குறையில்தான் பணிகள் நடைபெற்று வருகிறது. எனவே, கலெக்டர் மற்றும் வனத்துறை அதிகாரிகள் கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும். அப்போதுதான் மேகமலை அடிவாரத்தில் உள்ள சின்ன சுருளி அருவியை பாதுகாக்க முடியும்’ என்றார்.

Tags :
× RELATED மார்க்கையன்கோட்டை தடுப்பணையில் உற்சாக குளியல் போடும் பொதுமக்கள்