×

நான்குவழி சாலைக்கு கையகப்படுத்தும் விவசாய நிலங்களுக்கு குறைவான இழப்பீடு விவசாயிகள் அதிருப்தி

காரைக்குடி, மார்ச் 2:  காரைக்குடி-மேலூர் நான்கு வழிச்சாலைக்காக கையகப்படுத்தப்படும் விவசாய நிலங்களுக்கு குறைவாக இழப்பீடு வழங்கப்படுவதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.காரைக்குடி முதல் மேலூர் வரை 34 கிலோ மீட்டருக்கு நான்கு வழிச்சாலை அமைக்கப்பட உள்ளது. இதில் காரைக்குடி முதல் திருப்பத்தூர் வரை 14 கிலோ மீட்டரும், திருப்பத்தூர் முதல் மேலூர் வரை 20 கிலோ மீட்டருக்கும் சாலை அமைக்கப்பட உள்ளது. இச்சாலை கோவிலூர் நான்கு வழிச்சாலையில் இருந்து துவங்கி பாதரக்குடி, குன்றக்குடி, பிள்ளையார்பட்டி, தென்கரை, வாணியங்காடு, பிரான்பட்டி சென்று அங்கிருந்து மேலூர் நான்கு வழிச்சாலையில் இணைகிறது.

16 கிராமங்களை கடந்து இச்சாலை செல்கிறது. 60 மீட்டர் அகலத்தில் நான்கு வழிச்சாலை அமைக்கப்பட உள்ளது.  86 எக்டேர் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன. இழப்பீடுக்காக ரூ.14 கோடி நிதி ஒதுக்கப்பட்டு ரூ.4 கோடி வரை வழங்கப்பட்டுள்ளது. நான்கு வழிச்சாலையில் முதல்கட்டமாக தற்போது குன்றக்குடி பகுதியில் சாலை ஓரங்களில் உள்ள பலன் தரும் மரங்கள் அனைத்தும் வெட்டி அகற்றும் பணி நடக்கிறது. இப்பகுதியில் 5 ஆண்டுகளில் எந்த விவசாய நிலத்தையும் விற்பனை செய்யாததால் இடத்தின் மதிப்பு உயராமல் இருப்பதாக கூறி நஞ்சைக்கு சதுரமீட்டருக்கு ரூ.45ம், புஞ்சைக்கு சதுரமீட்டருக்கு ரூ.65ம் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. தஞ்சை முதல் மானாமதுரை வரையிலான சாலை பணிக்கு சதுரமீட்டருக்கு ரூ.955 ஒதுக்கப்பட்ட நிலையில் இப்பகுதியில் குறைவான இழப்பீடு வழங்கப்படுவதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
 
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘‘காரைக்குடி முதல் மேலூர் வரை 34 கிலோ மீட்டர் சாலையில் வீடுகள், விவசாய நிலங்கள், மரங்கள் அதிக அளவில் உள்ளன. இப்பகுதியில் விவசாய நிலங்களே அதிகஅளவில் கையகப்படுத்தப்பட உள்ளன. 86 எக்டேருக்கு மேல் கையகப்படுத்தப்பட உள்ள நிலையில் இழப்பீட்டு தொகையாக மிகக் குறைவான தொகையே வழங்கப்பட உள்ளது. தஞ்சை முதல் மானாமதுரை நான்கு வழிச்சாலை பணிக்கு விவசாய நிலங்களுக்கு சதுர மீட்டருக்கு ரூ.955 நிர்ணயம் செய்து இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இப்பகுதியில் கடந்த 5 ஆண்டுகளில் விற்பனை செய்யப்படாததால் அரசு குறைவான இழப்பீட்டு தொகை நிர்ணயம் செய்துள்ளதாக கூறி நஞ்சைக்கு சதுரமீட்டருக்கு ரூ.45ம், புஞ்சைக்கு ரூ.65ம் நிர்ணயம் செய்துள்ளனர். மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தவிர சுற்றுச்சூழல் மாசுபாடு அடைவதாக கூறி மரக்கன்றுகள் வளர்க்க வேண்டும் என கூறிவரும் நிலையில் சாலை ஓரங்களில் உள்ள 200க்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டி அகற்றப்பட உள்ளன. இதற்கு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும்’’ என்றனர்.

Tags : farmland ,Fourth Road ,
× RELATED ஆரல்வாய்மொழி – காவல் கிணறு நான்குவழி...