×

பூதப்பாண்டி அருகே பரபரப்பு கூட்டுறவு சங்க செயலாளர் வீட்டில் கொள்ளை வெளியூர் சென்றிருந்த போது கைவரிசை

பூதப்பாண்டி, மார்ச் 2: பூதப்பாண்டி அருகே வீடு புகுந்து பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். பூதப்பாண்டியை அடுத்த கடுக்கரை வாழைகோணம் பகுதியை சேர்ந்தவர் முத்துசாமி பிள்ளை என்ற விஸ்வம். தெரிசனங்கோப்பு பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க முன்னாள் செயலாளர் ஆவார். இவருக்கு மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். பிள்ளைகளுக்கு திருமணம் முடிந்து பெங்களூரூவில் வசித்து வருகின்றனர். கடந்த 14ம் தேதி முத்துசாமி தனது மனைவியுடன் பிள்ளைகளை பார்க்க பெங்களூர் சென்றார். இந்நிலையில் நேற்று காலை அவரது வீட்டு கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. இதை கண்ட அந்த பகுதியினர் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக பூதப்பாண்டி போலீஸ் மற்றும் முத்துசாமிக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து பூதப்பாண்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

அப்போது வெளியே கேட் பூட்டிகிடந்தது. ஆனால் மெயின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து போலீசார் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது பீரோ, அலமாரி மேஜை ஆகியவை திறந்து கிடந்தது. பின்னர் இதுகுறித்து போலீசார் முத்துசாமியை போனில் தொடர்பு கொண்டு பேசினர். அப்போது அவர், வீட்டில் நகைகள் எதுவும் இல்லை. ரூ.5 ஆயிரம் மட்டுமே இருந்தது என்று கூறினார். இதன் மூலம் அந்த பணத்தை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இது தவிர வீட்டில் ஏதாவது பொருட்கள் கொள்ளை போய் இருக்கிறதா? என்பது குறித்து, முத்துசாமி ஊருக்கு வந்தபிறகு தான் தெரியும் என்று போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து இந்த கொள்ளை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
நடத்தி மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : robbery ,house ,Poothappandi ,Parambarappa ,
× RELATED ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல் வாலிபர் கைது