×

வரிவசூல் செய்ய காலஅவகாசம் இருந்தும் மழலையர் பள்ளிக்கூடம் முன்பு வைக்கப்பட்ட குப்பைத்தொட்டி ராஜபாளையம் நகராட்சியின் செயலுக்கு வலுக்கும் எதிர்ப்பு

ராஜபாளையம், மார்ச் 1: ராஜபாளையம் நகராட்சியில் சொத்துவரி நிலுவைத்தொகையை வசூலிப்பதற்காக மழலையர் மற்றும் சிறுவர்கள் பள்ளி முன்பு குப்பைத்தொட்டி வைத்த நகராட்சியின் நடவடிக்கை அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், எதிர்ப்பையும் உருவாக்கியுள்ளது.
ராஜபாளையம் நகராட்சி சார்பில் சொத்து வரி, குழாய்வரி உள்ளிட்ட நிலுவை வரிகள் வசூலிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதை விரைவுபடுத்தும் நோக்கில் குடிநீர் குழாய் இணைப்பு துண்டிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதிக நிலுவை வைத்திருப்பவர்களின் அலுவலகம் முன்பு குப்பைத்தொட்டிகளை வைத்து உரிமையாளர்களுக்கு நெருக்குதல் கொடுக்கும் முறையில் ராஜபாளையம் நகராட்சி இறங்கியுள்ளது மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை உருவாக்கியுள்ளது.

ராஜபாளையம் பஞ்சு மார்க்கெட் அருகே உள்ள விவேகானந்தர் தெருவில் உள்ள தனியார் மழலையர் மற்றும் துவக்கப் பள்ளியின் நிலுவை தொகையை வசூலிப்பதற்காக பள்ளியின் கேட் முன்பு குப்பைத்தொட்டியை நகராட்சி ஊழியர்கள் வைத்து விட்டுச் சென்றனர். விவேகானந்தர் தெரு குடியிருப்பு சூழ்ந்த பகுதியாகவும், மெயின் ரோடாகவும் உள்ள இடமாகும். இப்பகுதியில் நாற்றமடிக்கும் குப்பைத்தொட்டியை நகராட்சி வைத்துள்ளது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. மார்ச் 5ம் தேதி வரை வரி கட்ட நகராட்சி சார்பில் கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், குழந்தைகள் படிக்கும் பள்ளி முன்பு நேற்று குப்பைத்தொட்டியை நகராட்சி ஊழியர்கள் வைத்துள்ளது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், `` நேற்று காலை பள்ளி வளாகத்தில் ஆண்டு விழாவிற்காக குழந்தைகள் பயிற்சி செய்து வந்தனர். இந்நிலையில் கழிவுகள் நிறைந்த தொட்டியை மெயின் கேட்டை திறக்க முடியாதபடி நகராட்சி வருவாய் அலுவலர்கள் வைத்துச் சென்றுள்ளனர். இதில் இருந்து வரும் அழுகிய துர்நாற்றம் குமட்டல் ஏற்படுத்துகிறது. தகவல் அறிந்த பெற்றோர் தங்கள் குழந்தைகள் பள்ளியிலிருந்து உடனே அழைத்து சென்று விட்டனர். வணிக நிறுவனங்களின் மேல் எடுக்கப்படும் நடவடிக்கையை இது போன்ற குழந்தைகள் படிக்கும் பள்ளி மேல் காட்டுவதை தவிர்க்க வேண்டும்’’ என்றனர்.

Tags : municipality ,corridor ,Rajapalayam ,tax evasion ,
× RELATED பேராவூரணி பேரூராட்சியில்