×

ஆவடி, அம்பத்தூர் பகுதி சிடிஎச் சாலையில் தடையை மீறும் கன்டெய்னர் லாரிகளால் விபத்து அபாயம்

ஆவடி, பிப். 28:  சென்னையில் இருந்து திருப்பதிக்கு பாடி, அம்பத்தூர் தொழிற்பேட்டை, அம்பத்தூர், திருமுல்லைவாயல், ஆவடி, பட்டாபிராம், திருநின்றவூர் வழியாக செல்லும் சிடிஎச் சாலையை ஆவடி பகுதியில் உள்ள ராணுவ துறை நிறுவனங்கள், மத்திய போலீஸ் பாதுகாப்பு படை, இந்திய விமான படை,  தமிழ்நாடு சிறப்பு காவல் படைகள், இந்திய உணவு கிடங்கு ஆகியவற்றில் பணியாற்றும் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அதிகாரிகள், ஊழியர்கள் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் இச்சாலை வழியாக சென்னை, புறநகர், திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய பகுதியில் உள்ள பொறியியல், கலை கல்லூரிகள் மற்றும் பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் சென்று வருகின்றனர். இவ்வாறு நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்வதால் சிடிஎச் சாலை எப்போதும் பரபரப்பாக இருக்கும்.  இந்நிலையில் சிடிஎச் சாலையில் கடந்த சில ஆண்டாக கன்டெய்னர் லாரிகள், கனரக சரக்கு வாகனங்கள் பகல் நேரங்களில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் வாகனங்கள் தாம்பரம் - புழல் புறவழிச்சாலை வழியாக சென்று வந்தன. இதனால் போக்குவரத்து நெரிசல் இன்றி மற்ற வாகனங்கள் எளிதாக சென்று வந்தன. ஆனால் சமீபகாலமாக கன்டெய்னர் லாரிகள், சரக்கு வாகனங்கள் இரவு பகல் பாராது ஏராளமாக வந்து செல்கின்றன. இதனால் பகல் நேரத்தில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்படுவதுடன், மற்ற வாகன ஓட்டிகளும் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘‘ஆவடி, அம்பத்தூர் பகுதியில் சமீப காலமாக கன்டெய்னர் லாரிகள்  அதிக அளவில் சென்று வருகின்றன. இந்த லாரிகள் வெளி மாநிலங்கள், மாவட்டங்களில் இருந்து வண்டலூர் - நெமிலிச்சேரி 400 அடி வெளிவட்ட சாலை வழியாக வருகின்றன.    இவ்வாறு வரும் 40 அடி வரை வரும் கன்டெய்னர் லாரிகள் பட்டாபிராம், ஆவடி, திருமுல்லைவாயல், அம்பத்தூர், கள்ளிக்குப்பம், சூரப்பட்டு வழியாக புழல் வழியாக துறைமுகத்திற்கு செல்கின்றன. இவைகள் அலுவலக நேரங்களில் மட்டும் அல்லாமல், அனைத்தும் நேரங்களிலும் சி.டி.எச் சாலையில் அதிவேகமாக செல்கின்றன. இதனால், கார், இருசக்கர வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சாலையில் செல்கின்றனர்.
  இதனால் இந்த சாலையில் அவசர தேவைக்கு ஆம்புலன்ஸ், தீயணைப்பு வண்டிகள் கூட செல்Wல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றன. இவ்வாறு பல்வேறு வகையான பிரச்னைகளுக்கு இடையே தற்போது  கன்டெய்னர் லாரிகளால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் கலக்கம் அடைந்துள்ளனர். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் பலமுறை போக்குவரத்து காவல் துறை அதிகாரிகளுக்கு புகார் செய்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாக உள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தலையிட்டு ஆவடி, அம்பத்தூர் சிடிஎச் சாலையில் கன்டெய்னர் லாரிகள், கனரக சரக்கு வாகனங்கள் செல்ல நிரந்தர தடை விதிக்க வேண்டும்’’ என்றனர்.

சுங்க கட்டணம் இல்லை
சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘‘வெளிமாநிலம், மாவட்டங்களில் இருந்து வரும் கன்டெய்னர் லாரிகள், சரக்கு வாகனங்கள் தாம்பரம் - புழல் புறவழிச்சாலையில் செல்லும்போது போரூர், கள்ளிக்குப்பம் ஆகிய இரு சுங்கச்சாவடிகளில் கட்டணம் செலுத்த வேண்டும். இதனை தவிர்க்கவே மேற்கண்ட வாகனங்கள் அம்பத்தூர், ஆவடி பகுதியில் உள்ள சிடிஎச் சாலை வழியாக செல்கின்றன. இதனால் லாரி உரிமையாளர்களுக்கு சுங்க கட்டணம் மிச்சமாகிறது. இதனால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் உயிரை கையில் பிடித்தபடி அச்சத்துடன் செல்கின்றனர்’’ என்றனர்.

Tags : Avadi ,Ambattur ,CDH ,area ,
× RELATED ஆவடி, அம்பத்தூர் பகுதியில் சிடிஎச்...