×

டியூப் லைட்டுகள் தானாக எரிகின்றன விளைநிலங்களில் உயர்மின்கோபுரம் அமைக்க தி.மு.க.,காங்., கம்யூ. எம்.பி.க்கள் எதிர்ப்பு

பல்லடம்,பிப்.28;விளைநிலங்களின் வழியே உயர்மின் கோபுரங்கள் அமைத்து மின்சாரம் கொண்டு செல்வதற்கு தி.மு.க.,காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் நேற்று முன்தினம் உயர் மின் கோபுரத்தால் பாதிக்கப்பட்ட அனுப்பட்டி கிராமத்தில் உள்ள விளை நிலத்தை திருப்பூர் எம்.பி. சுப்பராயன், கோவை எம்.பி. நடராஜன், கரூர் எம்.பி. ஜோதிமணி,  பொள்ளாச்சி எம்.பி. சண்முகசுந்தரம், ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி ஆகிய 5 எம்.பி.க்கள் நேரில் சென்று  ஆய்வு செய்தனர். அப்போது உயர்மின் கோபுரங்களுக்கு கீழே நின்று டியூப் லைட்டுகளை உயர்த்தி காட்டியபோது அது ஒளிர்ந்தது. மேலும் விவசாயிகள் மின் கோபுரங்களுக்கு கீழே உள்ள மின்காந்த அலையை பயன்படுத்தி சீரியல் பல்புகளை எரிய வைத்தனர். இது போல  இன்டிகேட்டர்களும் ஒளிர்ந்தது. எனவே மின்கோபுரங்கள் கீழே உள்ள விவசாயிகளுக்கு புற்றுநோய் போன்ற அபாயங்கள் ஏற்படும் எனவும் எம்.பி.க்கள் அச்சம் தெரிவித்தனர் இதுகுறித்து கோவை எம்.பி. நடராஜன் கூறுகையில், இணைப்பு எதுவும் இல்லாமல், ட்யூப்லைட் எரிகிறது. இன்டிகேட்டர் வைத்து பார்த்தாலும், மின்சாரம் இருப்பதை பிரகாசமாக காட்டுகிறது. உயர்மின்கோபுரம் அமைப்பதை நாங்கள் 5 எம்.பி.க்களும் கடுமையாக எதிர்க்கிறோம். உடல்நலகுறைவு நிச்சயம் ஏற்படும் என்பதால் மாநில அரசு தலையிட்டு இத்திட்டத்தில் இருந்து மக்களையும் விவசாயிகளையும் பாதுகாக்க வேண்டும்.

என்றார். கரூர் எம்.பி. ஜோதிமணி பேசுகையில் சீரியல் லைட், ஏரியல் கம்பி வைத்து மட்டுமே எரிவதை பார்க்க முடிகிறது. மக்களின் பாதுகாப்பை வரன் முறைப்படுத்த வேண்டும். விவசாயிகளின் அரசாங்கம் என்று சொல்ல கூடிய மாநில அரசு, இதை கண்டுகொள்ளாமல் இருக்கிறது. திருப்பூர் எம்.பி. சுப்பராயன் கூறும்போது, வளர்ச்சி திட்டம் மக்களுக்கு எதிராக உள்ளதால் மக்கள் அதனை எதிர்க்கிறார்கள். புதைவடமாக கொண்டு செல்வது சாத்தியம் இருந்தும் அதனை செயல்படுத்தவில்லை. மின்சாரம் எங்களது உடலில் பாய்வதை இண்டிகேட்டர் சுட்டிகாட்டுகின்றது என்பதற்கு நாங்கள் 5 நாடாளுமன்ற உறுப்பினர்களுமே சாட்சி என தெரிவித்தார். இதனையடுத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் பல்லடத்தில் நடைபெற்ற  உயர்மின் கோபுரங்களுக்கு எதிரான விவசாயிகள் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

Tags : MPs ,
× RELATED டெல்லியில் தலைமைத் தேர்தல்...