குந்தா நீரேற்று மின் நிலையம் சுரங்கபாதை அமைக்கும் பணி தீவிரம்

மஞ்சூர்,பிப்.28: குந்தா நீரேற்று மின் நிலையத்திற்கான சுரங்கபாதை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் ஏற்கனவே 833.65 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட 12 நீர் மின் நிலையங்கள் இயங்கி வருகிறது. இதைத்தொடர்ந்து மஞ்சூர் அருகே அவலாஞ்சி எமரால்டு அணைகளுக்கு இடையே காட்டுகுப்பை பகுதியில் குந்தா நீரேற்று மின் நிலையம் திட்டம் அறிவிக்கப்பட்டது. ரூ. ஆயிரத்து 831 கோடி மதிப்பீட்டில் 4 பிரிவுகளில் 500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் வகையில் திட்டமிடப்பட்ட நீரேற்று மின் நிலைய கட்டுமானப்பணிகள் கடந்த 2013ம் பணிகள் துவக்கப்பட்டது.  

முதற்கட்டமாக மலையை குடைந்து சுமார் 2,300 மீட்டர் நீளத்திற்கு சுரங்கப்பாதை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு பணிகள் துவங்கியது. இந்நிலையில் நிர்வாக காரணங்களால் சுரங்கப்பாதை அமைக்கும் பணிகளில் இடை,இடையே தொய்வு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து சமீபத்தில் மீண்டும் பணிகள் விரைவுப்படுத்தப்பட்டு தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மொத்தம் 2,300 மீட்டர் நீளத்தில் தற்போது 2 ஆயிரம் மீட்டர் வரை மலையை குடைந்து சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. பணிகள் துரிதப்படுத்தப்பட்டு உள்ளதால் விரைவில் சுரங்கப்பாதை பணிகள் முழுமைபெறும். இதைத்தொடர்ந்து நடப்பாண்டு இறுதி அல்லது அடுத்தாண்டு துவக்கத்தில் முதல் பிரிவில் மின் உற்பத்தி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

Related Stories:

>