×

பழைய கட்டிடத்தில் இயங்கும் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம்: அச்சத்தில் ஊழியர்கள்

திருவள்ளூர், பிப் 27: திருவள்ளூர் மாவட்டம் உதயமாகி 24 ஆண்டுகள் ஆகியும், மின்வாரியசெயற்பொறியாளர் அலுவலகம் கட்டப்படாமல், பாழடைந்த வாடகை கட்டிடத்தில் இயங்கிவருகிறது. அக்கட்டிடமும் கழிவுநீர் வெளியேறாமல் தேங்கிக்கிடப்பதால், பணிபுரியும் ஊழியர்களுக்கு பல்வேறு நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. கடந்த 1996ம் ஆண்டு செங்கல்பட்டு மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டு, திருவள்ளூர் மாவட்டம் உதயமானது. இதையடுத்து அனைத்து மாவட்ட அலுவலகங்களும் கட்ட, பெரும்பாக்கம் பகுதியில் பெருந்திட்ட வளாகம் உருவாக்கப்பட்டது. இங்கு அனைத்து மாவட்ட அரசு அலுவலகங்களும் கட்டப்பட்டுள்ளது.

ஆனால், மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் மற்றும் செயற்பொறியாளர்அலுவலகம் மட்டும் கட்ட இதுவரை இடமும், நிதியும் ஒதுக்கப்படவில்லை. இதனால், கடந்த 24 ஆண்டுகளாக ரயில் நிலையம் அருகே பாழடைந்த கட்டிடம் ஒன்றில் வாடகைக்கு மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் மட்டும் இயங்கி வருகிறது. இதனால் அரசு பணமும் வீணாகி வருகிறது.இந்நிலையில், கடந்த சில மாதங்களாக இக்கட்டிடத்தில் உள்ள கழிவறைகளில் கழிவுநீர் வெளியே செல்ல இயலாமல், அலுவலக வளாகத்திலேயே தேங்கிக்கிடக்கிறது. இதனால், துர்நாற்றம் வீசிவருவதோடு, ஊழியர்கள் மூக்கைப்பிடித்தபடி பணி செய்யும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. மேலும், ஊழியர்களுக்கு பல்வேறு தொற்றுநோய்களும் ஏற்படும் அபாயம் உள்ளது. குறிப்பாக இங்கு பணிபுரியும் பெண்கள் மிகவும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். கடந்த 2016ம் ஆண்டு சட்டமன்ற கூட்டத்தொடரில், அப்போதைய முதல்வர் ஜெயலலிதா திருவள்ளூர் மற்றும் பல்லடம் ஆகிய புதிய மின் பகிர்மான வட்டங்கள் பொதுமக்களின் நலன்கருதி துவக்கப்படும் என அறிவித்தார்.

பல்லடத்தில் மட்டும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு செயல்முறைக்கு வந்துவிட்டது. ஆனால், திருவள்ளூர் மின் பகிர்மான வட்டம் இன்னும் நடைமுறைப்படுத்தாமல் உள்ளது. எனவே பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் நலன்கருதி திருவள்ளூரில் மேற்பார்வை பொறியாளர் மின் பகிர்மான திட்டத்தை செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கென, கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் இடமும், அதற்கான நிதியும் ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Tags : Office of Electricity Operator ,Old Building: Staff in Fear ,
× RELATED வெளிமாநில தொழிலாளர்களுக்கு...