×

கும்மிடிப்பூண்டி அருகே விவசாய நிலத்தில் இறால் பண்ணை அமைக்க எதிர்ப்பு: பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கும்மிடிப்பூண்டி, பிப். 27: கும்மிடிப்பூண்டி அடுத்த பூவலை பகுதியில் விவசாய நிலங்களுக்கு மத்தியில் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலை அமைக்கப்படுவதை கண்டித்து அப்பகுதி விவசாயிகளுடன் சேர்ந்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கும்மிடிப்பூண்டி அடுத்த பூவலை ஊராட்சி மற்றும் அதை சுற்றி வசிப்பவர்களில் ஏராளமானவர்கள் விவசாயிகள். இவர்கள, பூவலை, தண்டலம் பகுதியில் உள்ள 100 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலப்பரப்பில் நெல், வேர்கடலை, கம்பு, கேழ்வரகு, உளுந்து என பல்வேறு வகையான பயிர்களை செய்து வருகின்றனர்.இந்நிலையில் இப்பகுதியில் உள்ள 10 ஏக்கர் விவசாய நிலத்தை ஒருவர் வாங்கினார். அந்த நிலத்தில் இறால் பண்ணை மற்றும் பதப்படுத்தப்படும் தொழிற்சாலை அமைக்க திட்டமிட்டார். அதற்கான பூமி பூஜை நடத்த நேற்று ஏற்பாடு செய்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் திரண்டு வந்தனர். இந்த இடத்தில் இறால் பண்ணை அமைத்தால்,  பண்ணையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீரால் விவசாயம் அடியோடு பாதிக்கப்படும். நிலத்தடி நீர் மாசடைந்து குடிநீருக்கு அல்லல்படும் சூழ்நிலை உருவாகும்.  அதுமட்டுமின்றி சுற்றுச்சூழல் பாதிப்பால் தொற்று நோய் ஏற்படும். எனவே, இங்கு இறால் பண்ணை மற்றும் பதப்படுத்தப்படும் தொழிற்சாலை அமைக்க அனுமதிக்க மாட்டோம் என கோஷமிட்டப்படி ஆர்ப்பாட்டம் செய்தனர்.இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஆரம்பாக்கம் போலீசார் விரைந்து வந்து, ஆர்ப்பாட்டம் செய்த பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத்தொடர்ந்து பூமி பூஜைக்கான ஏற்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

  இது குறித்து பொதுமக்கள் தரப்பில், “ பூவலை பகுதியை ஒட்டி கொண்டமாநெல்லூரில் இதேபோன்று இறால் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலை கழிவுகளாலும், தொழிற்சாலை பயன்பாட்டிற்கு போடப்பட்டுள்ள ஆழ்துளை கிணற்றினாலும் நிலத்தடி நீர் அடியோடு பாதித்துள்ளது.
 பூவலையில் இதேபோல் தொழிற்சாலைகள் விவசாய நிலங்களுக்கு மத்தியில் அமைந்தால்  விவசாயம் பாதிக்கப்படும். இதனை கருத்தில் கொண்டே கடந்த மாதம் நடந்த குடியரசு தினத்தன்று நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தில், மேற்கண்ட தொழிற்சாலை செயல்பட அனுமதி மறுத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. எனவே, எங்கள் பகுதி விவசாய நிலங்களில் இறால் பண்ணைகள் அமைக்க விடமாட்டோம்  என்றனர். இதனை கேட்ட போலீசார், இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திடம் முறையிடுமாறும், ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு கலைந்து செல்லும்படியும் அறிவுரை வழங்கினர். இதை ஏற்று ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : shrimp farm ,land ,demonstration ,Gummidipoondi ,
× RELATED தமிழ்நாட்டில் தயாராகிறது ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்..!!