×

விருதுநகரில் பாவாலி ரோட்டில் மந்தகதியில் நடந்து வரும் வாறுகால் கட்டும் பணி வாகன ஓட்டிகள் அவஸ்தை

விருதுநகர், பிப்.27:விருதுநகரில் பாவாலி ரோட்டில் வாறுகால் கட்டும் பணி தாமதமாக நடைபெறுவதால் போக்குவரத்து கடுமையாக
பாதிக்கப்பட்டுள்ளது.விருதுநகர் பழைய பஸ் நிலையம் அருகே துவங்கி கல்பள்ளிவாசல், நகராட்சி நடுநிலைப்பள்ளி வழியாக திரும்பி மின்வாரிய அலுவலகம், மாவட்ட மைய நூலகம் வரையிலான பாவாலி ரோடு அமைந்துள்ளது. பழைய பஸ் நிலையம் வரும் அனைத்து டவுன் பஸ்கள், சிவகாசியில் இருந்து மதுரை செல்லும் பஸ்கள் அனைத்தும் டிடிகே ரோடு, மின்வாரிய அலுவலகம், மாவட்ட மைய நூலகம் வழியாக புல்லாலக்கோட்டை ரோடு வழியாக வந்து சென்றன. பழைய பஸ் நிலையத்தில் இருந்து சிவகாசி செல்லும் பஸ்கள் கல்பள்ளிவாசல், டிடிகே ரோடு வழியாக சென்றுவந்தன.

இந்நிலையில் பாவாலி ரோட்டில் மின்வாரிய அலுவலகம் எதிரே சாலையின் குறுக்கே வாறுகால் கட்டும் பணி கடந்த இரு மாதங்களாக நடந்து
வருகிறது. டிடிகே ரோடு, மின்வாரிய அலுவலகம், மீனாம்பிகை பங்களா வழியாக பழைய பஸ் நிலையம் வந்து கொண்டிருந்த பஸ்கள் தற்போது கல்பள்ளிவாசல் வழியாக பழைய பஸ் நிலையம் வர அனுமதிக்கப்படுகின்றன.சாலையின் குறுக்கே வாறுகால் கட்டும் பணியால் கல்பள்ளிவாசல் வழியாக உள்வரும், வெளிவரும் பஸ்களும் இயக்கப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு விபத்து அபாயம் உருவாகி உள்ளது. மாதக்கணக்கில் ரோட்டை மறித்து நடைபெற்று வரும் வாறுகால் கட்டும் பணியை விரைவாக முடிக்க நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.

Tags : Motorists ,Virudhunagar ,Pawali Road ,
× RELATED தணிக்கை குழு சார்பில் நெடுஞ்சாலைத்துறை பணிகள் ஆய்வு