×

சிவகாசி அருகே விதிமீறிய பட்டாசு ஆலைக்கு சீல் வைப்பு: அதிகாரிகள் அதிரடி

சிவகாசி, மே 16: சிவகாசி அருகே சஸ்பெண்ட் செய்யப்பட்ட பட்டாசு ஆலையில் 50 தொழிலாளர்கள் பட்டாசு உற்பத்தியில் ஈடுபட்டதால் அந்த பட்டாசு ஆலையின் உரிமத்தை ரத்து செய்ய தாசில்தார் வடிவேல் பரிந்துரை செய்துள்ளார்.

சிவகாசி அருகே மாரனேரி கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. இந்த பட்டாசு ஆலை விதிமீறல் காரணமாக விருதுநகர் மாவட்ட வருவாய் அலுவலர் ஆணையின்படி கடந்த மார்ச் 1ம் தேதி தற்காலிகமாக சஸ்பெண்ட் செய்யப்பட்டது. இந்த பட்டாசு ஆலையில் அதிகாரிகளுக்கு தெரியாமல் அனுமதியின்றி பட்டாசு உற்பத்தி நடைபெறுவதாக சிவகாசி தாசில்தார் வடிவேலுக்கு ரகசிய தகவல் வந்துள்ளது.

அதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட பட்டாசு ஆலையில் தாசில்தார் வடிவேல் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர். ஆய்வில் உரிய அனுமதியின்றி 50 தொழிலாளர்களை வைத்து பட்டாசு உற்பத்தி செய்யும் பணி நடைபெற்று வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து விதிகள் மீறி இயங்கிய பட்டாசு ஆலையை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். சம்பந்தப்பட்ட பட்டாசு ஆலையின் உரிமையாளர் கண்ணன் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாரனேரி போலீஸ் ஸ்டேஷனில் விஏஓ ஜெயபால் மூலம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பட்டாசு ஆலை உரிமத்தினை ரத்து செய்யவும் பரிந்துரை செய்யப்பட்டது.

The post சிவகாசி அருகே விதிமீறிய பட்டாசு ஆலைக்கு சீல் வைப்பு: அதிகாரிகள் அதிரடி appeared first on Dinakaran.

Tags : Sivakasi ,Tahsildar Vadivel ,Maraneri ,
× RELATED சிவகாசியில் விதிமீறி இயங்கிய பட்டாசு...