×

திலேப்பியா மீன் பண்ணை அமைக்க அழைப்பு

சிவகங்கை, பிப். 25: மீன் வளர்க்கும் விவசாயிகள் மரபணு மேம்படுத்தப்பட்ட திலேப்பியா மீன்களை (கிப்ட் திலேப்பியா மீன்கள்)  பண்ணை குட்டைகளில் வளர்த்தால் அதிக லாபம் பெறலாம்.  இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவித்துள்ளதாவது: மரபணு மேம்படுத்தப்பட்ட திலேப்பியா மீன்கள் குறைந்த பரப்பளவில் அதிக எண்ணிக்கையில் இருப்பு செய்து வளர்க்கலாம். இவ்வகை மீன்கள் அதிக நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. மற்ற மீன்களை காட்டிலும் பண்ணைக்குட்டைகளில் இம்மீன்கள் மிக வேகமாக வளரக்கூடியதும், நுகர்வோர் அதிகம் விரும்புவதும் என சிறப்புத்தன்மை பெற்றுள்ளது. நீரின் அமில காரத்தன்மையின் ஏற்றத் தாழ்வுகளையும் அதிகளவில் எதிர்கொண்டு வேகமாக வளரக்கூடியது. எனவே விவசாயிகள் தங்களது பண்ணைக்குட்டைகளில் மரபணு மேம்படுத்தப்பட்ட திலேப்பியா மீன்களை வளர்த்து அதிக அளவில் பயன்பெறலாம்.

மரபணு மேம்படுத்தப்பட்ட திலேப்பியா மீன் இன குஞ்சுகள் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி அணை அருகில் அமைந்துள்ள அரசு மீன் பண்ணையில் ஆண்டு முழுவதும் விற்பனைக்கு தயாராக உள்ளது. இவ்வகை இன மீன்களை வளர்க்கும் விவசாயிகள் தங்களது மீன் பண்ணையை  மாவட்ட மீன் வளர்ப்போர் மேம்பாட்டு முகமையில் மீன்பண்ணையை பதிவு செய்து அதன் பின்னரே தங்களது பண்ணைகளில் கிப்ட் திலேப்பியா மீன்களை வளர்க்க வேண்டும். மேலும் மீன்பண்ணையை சுற்றிலும் பாதுகாப்பு வேலி அமைத்து எக்காரணம் கொண்டும் இம்மீன்கள் அருகாமையில் உள்ள நீர்நிலைகளில் பரவா வண்ணம் பார்த்து கொள்ள வேண்டும். கூடுதல் விவரம் அறிய 04575 240848என்ற சிவகங்கை, மீன்துறை உதவி இயக்குநர் அலுவலக தொலைப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Tilapia Fish Farm ,
× RELATED திலேப்பியா மீன் பண்ணை அமைக்க அறிவுறுத்தல்