×

மஞ்சூர் அருகே மாணவர்களை அச்சுறுத்திய கரடியால் பரபரப்பு

மஞ்சூர், பிப்.21:   மஞ்சூர் அருகே உள்ள ஓணிகண்டி, அன்னமலை, பெள்ளத்திகம்பை சுற்றுபுற பகுதிகளை சேர்ந்த பெரும்பாலான மாணவ, மாணவிகள் மஞ்சூர் அரசு மேல்நிலைப்பள்ளி, அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளில் படித்து வருகிறார்கள்.  நேற்று பள்ளி முடிந்து மாலை 5 மணியளவில் மாணவர்கள் தங்களது வீடுகளுக்கு திரும்பி கொண்டிருந்தனர். அன்னமலை பாதையில் சென்று கொண்டிருந்தபோது அருகில் இருந்த தேயிலை தோட்டத்தில் இருந்து வெளியேறிய கரடி ஒன்று ஆக்ரோசத்துடன் மாணவர்களை விரட்ட துவங்கியது. திடீரென கரடி வருவதை கண்ட மாணவர்கள் பீதி அடைந்து அலறி அடித்து கொண்டு வந்த வழியே திரும்பி ஓடினார்கள். மேலும், கரடியும் விடாமல் மாணவர்களை விரட்டி சென்றுள்ளது.

இந்நிலையில் மாணவர்களின் அலறலை கேட்ட அங்கிருந்த பொதுமக்கள் சத்தம் போட்டு ஓடினார்கள். அதற்குள் கரடி மாணவர்களை விரட்டுவதை விட்டு அருகில் இருந்த தேயிலை தோட்டத்திற்கு ஓடி சென்று மறைந்தது. இதை தொடர்ந்து அப்பகுதியை சேர்ந்த ஒருவர் தனது ஜீப்பின் மூலம் மாணவ, மாணவிகளை ஏற்றி வீடுகளுக்கு அழைத்து சென்றார். கடந்த இரு தினங்களுக்கு முன் இதே பகுதியில் கனகன் என்பரவது டீ கடையின் பின்புற கதவை இரவு நேரத்தில் உடைத்து உள்ளே புகுந்த கரடி அங்கிருந்த தின்பண்டங்களை சூறையாடியதுடன்  இதே போல் மஞ்சூர் பஜாரில் உள்ள பேக்கரிக்குள் புகுந்த கரடி அங்கிருந்த தின்பண்டங்கள், பொருட்களையும் நாசம் செய்து சென்றுள்ளது.

மஞ்சூர் சுற்றுபுறங்களில் உள்ள கொட்டரகண்டி, கரியமலை, கண்டிமட்டம், முள்ளிமலை, கெச்சுகட்டி, மஞ்சூர் அட்டி, கண்டிபிக்கை என தினசரி ஒவ்வொரு பகுதி களுக்கு சென்று கோயில்களின் கதவு, ஜன்னல்களையும் உடைத்து பூஜை பொருட்களை நாசம் செய்து வரும் கரடி தற்போது ஆட்கள் நடமாட்டம் உள்ள பகல் நேரங்களிலேயே உலா வரத் துவங்கியுள்ளது. இது பொதுமக்கள் மத்தியில் கடும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து கரடியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தும் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்காமல் மெத்தனமாக உள்ளனர். கரடியால் மனிதர்களுக்கு பாதிப்பு ஏற்படும் முன் அதை பிடித்து முதுமலை வனப்பகுதியில் கொண்டு விட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.



Tags : Manjur ,
× RELATED கொடைக்கானல் மஞ்சூர் வனப்பகுதியில்...