×

பூந்தமல்லி அருகே இடிந்து விழும் ஆபத்தில் தொகுப்பு வீடுகள்

பூந்தமல்லி, பிப். 20: பூந்தமல்லி அருகே உள்ள காட்டுப்பாக்கத்தில் 30 ஆண்டுகளுக்கு முன்பு ஆதி திராவிட மக்களுக்கு அரசால் தொகுப்பு வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டது. இந்த வீடுகள், தற்போது பழுதடைந்து எப்போது இடிந்து விழுமோ என்ற நிலையில் உள்ளதால், மக்கள் அச்சத்தில் வீடுகளில் வசித்து வருகின்றனர்.  பூந்தமல்லி ஒன்றியத்துக்குட்பட்ட காட்டுப்பாக்கம் தெருவீதி அம்மன் கோயில் தெருவில் 30 ஆண்டுகளுக்கு முன்பு அரசு சார்பில் இலவச தொகுப்பு வீடுகள் 200 குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு  கட்டிக் கொடுக்கப்பட்டது. 30 ஆண்டுகளுக்கு மேலானதால் இந்த தொகுப்பு வீடுகளில் பெரும்பாலானவை பழுதடைந்து மக்கள் வசிப்பதற்கு தகுதியில்லாமல் உள்ளது. ஆனாலும், இதில் வசிக்கும் மக்கள் பொருளாதார  சூழ்நிலை காரணமாக பழுதடைந்த வீடுகளை சீரமைக்கும் நிலையில் இல்லை. இதில், பெரும்பாலான வீடுகளின் மேற்கூரைகள் பெயர்ந்து இடிந்து விழும் நிலையில் உள்ளன. மழைக்காலங்களில் மழைநீர்  ஒழுகுவதால் வீட்டின் மேற்கூரையை தார்பாயால் மூடி வைத்துள்ளனர். மேலும், எப்போது இடிந்து விழுமோ என்ற அச்சத்துடனேயே இங்கு வசிக்கும் மக்கள் பீதியில் உள்ளனர்.

இதேபோல கடந்த ஆண்டு மழை பெய்தபோது வீட்டின் சுவர் இடிந்து விழுந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். இந்த வீடுகளின் நிலை குறித்து அப்பகுதியில் வசிக்கும் மக்கள் அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவ்வப்போது அதிகாரிகள் வந்து கண்துடைப்புக்காக ஆய்வு செய்வதோடு சரி. அதன்பிறகு இந்தப்பக்கம் வருவதேயில்லை மேலும், காட்டுப்பாக்கம் ஊராட்சியில் இந்த பகுதியை மட்டும் தொடர்ந்து புறக்கணித்து வருகின்றனர். மற்ற பகுதியில் அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளன. ஆனால், தெருவீதி அம்மன் கோயில் தெரு, கே.கே. நகர் பகுதியில் கால்வாய் வசதி இல்லை, குப்பைகள் சரிவர அள்ளுவதில்லை. பன்றிகள் தொல்லையால் தொற்று நோய் பரவும் அபாயமும் உள்ளது. மழைக்காலங்களில் மழை நீரும், கழிவு நீரும் சேர்ந்து இந்தப் பகுதி முழுவதும் கடுமையாக பாதிக்கப்படுகிறது என பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்

இந்நிலையில் திருவள்ளூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயக்குமாருக்கு, இந்த பிரச்னை குறித்து அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அவர் நேற்று இங்குள்ள பழுதடைந்த வீடுகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்பகுதி மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். பின்னர், இது குறித்து அவர் கூறுகையில், ‘30 ஆண்டுகளுக்கு மேலான வீடுகளை முழுவதும் இடித்து விட்டு புது வீடுகள் கட்டித்தரவும், மற்ற வீடுகளின் பழுதை சீரமைத்து தரவும் நடவடிக்கை எடுக்கப்படும். இது குறித்து மாவட்ட ஆட்சியர், தாட்கோ அதிகாரிகள், பூந்தமல்லி வட்டார வளர்ச்சி அதிகாரிகள் ஆகியோரிடம் கலந்து பேசி விரைவில் புது வீடுகள் கட்டித்தர நடவடிக்கை எடுப்பேன்’ என்றார். இந்த நிகழ்ச்சியின்போது பூந்தமல்லி வட்டார வளர்ச்சி அலுவலர் வாசுதேவன், தாட்கோ அதிகாரிகள், மாவட்ட காங்கிரஸ் தலைவர் பூவை ஜேம்ஸ், மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

Tags : Package houses ,Poonthamalli ,
× RELATED சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம் மீது மனைவி போலீசில் புகார்