×

616 ஏக்கர் நிலத்தை டிசம்பருக்குள் ஒப்படைக்க கெடு காலாவதியாகிறதா விமான ஓடுபாதை விரிவாக்க திட்டம்?

மதுரை, பிப். 20: மதுரை விமான நிலையம் சர்வதேச தரத்திலான ஓடுபாதை விரிவாக்கத்திற்காக ஆர்ஜிதம் முடிக்கப்பட்ட 616 ஏக்கர் நிலத்தை விமான ஆணையத்திடம் தமிழக அரசு ஒப்படைக்காமல் 10 ஆண்டுகளாக இழுத்தடிக்கிறது. விமான ஓடுபாதை விரிவாக்க திட்டத்திற்கான கால அவகாசம் இந்த ஆண்டு டிசம்பரில் முடிவதால், நிலத்தை ஒப்படைக்க தவறினால் அந்த திட்டம் காலாவதியாகும் அபாயம் எதிர்நோக்கி இருப்பதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. மதுரை விமான நிலையம் சர்வதேச அந்தஸ்துக்கு உயர வேண்டும் என்பது நீண்டகால கனவாகும். 1957ல் உருவாகி 63 ஆண்டுகள் கடந்தும் இன்னும் அந்த அந்தஸ்துக்கு உயர முடியவில்லை. இதற்கு பிறகு உருவான திருச்சி, கோவை விமான நிலையங்கள் சர்வதேச அந்தஸ்துக்கு உயர்ந்துள்ளன. மதுரைக்கு மட்டும் ஏன் இந்த சோதனை என்பது அதிர்ச்சிக்குரியது. 2008ல் மதுரை சர்வதேச விமான நிலையமாக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்து, முதற்கட்டமாக ரூ.130 கோடியில் நவீன டெர்மினல் அமைத்து 2010ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் இலங்கை, சிங்கப்பூர், துபாய் போன்ற வெளிநாடுகளுக்கும், சென்னை, பெங்களூரூ போன்ற நகரங்களுக்கும் விமானங்கள் இயக்கப்படுகின்றன.
விமான ஓடுபாதை தற்போது 7,500 அடி உள்ளது. சர்வதேச தரத்திற்கு உயர 12,500 அடியாக விரிவடைய வேண்டும்.

இதன்படி ஓடுபாதை விரிவாக்கத்திற்கு தேவையான நிலத்தை தமிழக அரசு ஆர்ஜிதம் செய்து ஒப்படைக்கும்படி விமான ஆணையம் கேட்டது.
இதை ஏற்று 616 ஏக்கர் நிலம் விவசாயிகளிடம் இருந்தும், வீடு கட்ட பிளாட்டாக வைத்து இருந்தவர்களிடமும் 2010ல் ஆர்ஜிதம் செய்யப்பட்டது. 616 ஏக்கரில் 466 ஏக்கர் தனியார் நிலங்களுக்கு மொத்த இழப்பீடு ரூ.166 கோடிேய 69 லட்சம் என 2018ல் விலை நிர்ணயம் செய்யப்பட்டது. அதன்படி பெரும்பாலானோருக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலத்தை ஒப்படைக்கும்படி ஏற்கனவே பலமுறை தமிழக அரசுக்கு விமான ஆணையம் கடிதம் எழுதியது.

ஆனால், 10 ஆண்டுகளாகியும் நிலம் ஒப்படைக்கப்படாமல் இழுபறி நீடிக்கிறது. புதிதாக கட்டிய நவீன டெர்மினலில் பாதிக்கு மேல் காலியாக கிடக்கிறது. ஓடுபாதை விரிவாக்கத்திற்காக 2018ல் ரூ.700 கோடி நிதி ஒதுக்கி தயாரானது. ஆனால், நிலம் ஒப்படைக்கப்படாததால், அந்த நிதி வேறு மாநிலத்துக்கு திசை மாறி பறந்தது. ஓடுபாதை திட்டம் தயாராகி 10 ஆண்டுகள் முடிந்ததால் அதன் கால அவகாசம் இந்த ஆண்டு இறுதியில், அதாவது டிசம்பரில் காலாவதியாகும் சிக்கலில் இருப்பதாக கூறப்படுகிறது.எனவே, அதற்கு முன்னதாக 616 ஏக்கர் நிலத்தை தமிழக அரசு ஒப்படைக்க தவறினால், 2010ல் தயாரித்த ஓடுபாதை திட்டத்தின் காலக்கெடு முடிந்து. விமான நிலையம் சர்வதேச அந்தஸ்துக்கு உயர்வது கேள்விக்குறியாகும் என வர்த்தகர்கள் அஞ்சுகின்றனர்.

Tags : land ,
× RELATED தமிழ்நாட்டில் தயாராகிறது ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்..!!