×

காட்டுமன்னார்கோவில் வட்டத்தில் மின்மோட்டார் பொருத்தி குடிநீர் திருட்டு

காட்டுமன்னார்கோவில், பிப். 19: காட்டுமன்னார்கோவில் வட்டத்தில் மின்மோட்டார் பொருத்தி குடிநீரை உறிஞ்சிஎடுப்பதால் பொதுமக்கள் தண்ணீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர்.இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
காட்டுமன்னார்கோவில் வட்டத்தில் உள்ள 48 ஊராட்சிகளில் வசிக்கும் கிராமமக்களின் குடிநீர் தேவைக்காக ஊரக வளர்ச்சி திட்டம் மூலம் அந்தந்த பகுதிகளில் 30 ஆயிரம் லிட்டர் வரையிலான கொள்ளளவு கொண்ட குடிநீர் மேல்நிலை தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவைதவிர 5 முதல் 10 ஆயிரம் லிட்டர் தண்ணீர் சேமிக்கும் சிறியவகை தொட்டிகளும் சட்டமன்ற உறுப்பினர் நிதியில் அமைக்கப்பட்டுள்ளன. இவைகளில் இருந்து கிராம மக்களுக்கு குடிநீரை விநியோகம் செய்ய பராமரிப்பாளர்களும் பணியமர்த்தப்பட்டுள்ளனர். அப்படி இருந்தும் பல்வேறு கிராம பகுதிகளில் வசிக்கும் அடித்தட்டு மக்களுக்கு குடிநீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக செட்டித்தாங்கல், கீழகடம்பூர், மேலக்கடம்பூர், அருண்மொழிதேவன், ஈச்சம்பூண்டி, தொரப்பு, ஷண்டன், சிறுகாட்டூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குடிநீர் மேல்நிலை தொட்டிகளில் இருந்து தரையில் புதைக்கப்பட்ட குழாய்களின் மூலம் கிராமப்புற தெருக்களுக்கு தண்ணீர் வழங்கப்படுகின்றது.

ஆனால் குடிநீர் தொட்டிகள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் தற்போது வீடுகளுக்கு அளிக்கப்பட்டுள்ள குடிநீர் இணைப்புகளில் பெரும்பாலான கிராம மக்கள் சிறியவகையிலான மின்மோட்டார்களை பொருத்தி வீட்டு குடிநீர் தொட்டிகளை நிரப்பி வருகின்றர்.
மேலும் புதிய கட்டிட பணிகள் போன்றவைகளுக்கு இதிலிருந்து முறைகேடாக நீரை உறிஞ்சி எடுக்கின்றனர். இதனால் கடைகோடி பகுதிகளில் வசிக்கும் அடித்தட்டு மக்களுக்கு குடிநீர் கிடைப்பது சவாலான காரியமாக உள்ளது. மேலும் இவர்கள் பயன்படுத்திய உபரிநீர் வீணாகி தெருக்களில் ஓடும் அவலநிலை தொடர்கதையாகி உள்ளது.

இதுகுறித்து செட்டித்தாங்கல் பொதுமக்களிடம் கேட்டபோது, ஊராட்சி நிர்வாகத்தில் உள்ள அனைத்து அலுவலர்களுக்கும் தெரிந்துதான் இந்த முறைகேடுகள் நடைபெறுகின்றன. இவர்களின் அலட்சியம் குறித்து பலமுறை வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்தும் நடவடிக்கை இல்லை என தெரிவித்தனர். எனவே மாவட்ட நிர்வாகம் மக்கள் குடிநீர் பிரச்னையில் தலையிட்டு முறைகேடாக குடிநீர் திருட்டில் ஈடுபடுவோரிடம் இருந்து அதிகப்படியான அபராதங்கள் வசூலிக்க வேண்டும். இதற்கு பயன்படுத்தப்படும் மின்மோட்டார்களை பறிமுதல் செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : Theft ,circuit ,Katumannarkoil ,
× RELATED சென்னையில் கடந்த 7 நாட்களில் திருட்டு...