×

ஒட்டன்சத்திரம் பகுதியில் சத்துணவு முட்டை வழங்குவதில் மோசடி அதிகாரிகள் விசாரணை அவசியம்

ஒட்டன்சத்திரம், பிப். 19: ஒட்டன்சத்திரம் பகுதி பள்ளிகள், அங்கன்வாடிகளில் சத்துணவு முட்டை வழங்குவதில் மோசடி நடப்பதாகவும், இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.ஒட்டன்சத்திரம் தாலுகாவில், 35 ஊராட்சிகளில் உள்ள பள்ளிகள் மற்றும் அங்கன்வாடிகளுக்கு சத்துணவு திட்டத்தின் கீழ் முட்டை வழங்கப்படுகிறது. பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வாரத்தில் 5 நாட்களும், அங்கன்வாடியில் உள்ள குழந்தைகளுக்கு வாரத்தில் 3 நாட்களும் முட்டைகள் வழங்கப்படுகிறது. இந்நிலையில் ஒட்டன்சத்திரம் பகுதிபள்ளிகள், அங்கன்வாடிகளுக்கு முட்டை வழங்கும் ஒப்பந்ததாரர் மாதத்தில் 2 நாட்கள் அல்லது 3 நாட்கள் முட்டைகள் வழங்குவதில்லை என்றும், ஆனால் முட்டை வழங்கியதாக கணக்குகள் காட்டுவதாகவும், மேலும் அதிகளவில் அழுகிய முட்டைகள் வருவதாகவும் அதிகாரிகளிடம் ஊழியர்கள் புகார் அளித்துள்ளனர் இதனடிப்படையில் கடந்த வாரம் திடீரென்று ஒட்டன்சத்திரம் மலைப்பகுதியில் உள்ள 15க்கும் மேற்பட்ட பள்ளிகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது பிப். 10, 12 ஆகிய தேதிகளில் (திங்கள், செவ்வாய்) முட்டைகள் வழங்கவில்லை என்று கண்டறியபட்டது.

இதுகுறித்து சமூகஆர்வலர்கள் கூறுகையில், ‘இப்பகுதி பள்ளிகள், அங்கன்வாடிகளுக்கு முட்டை வழங்குவதற்கு நாமக்கல்லை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒப்பந்தம் எடுத்துள்ளது. இவர்கள் முறையாக முட்டை வழங்காமல், வழங்கியதாக கணக்கு காட்டி வருகின்றனர். மேலும் அழுகிய முட்டைகள் அதிகளவில் வருகிறது. எனவே அதிகாரிகள் விசாரணை நடத்தி இவர்களின் ஒப்பந்தத்தை உடனே ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.



Tags : Investigation ,fraud officers ,area ,Ottansatram ,
× RELATED முன்னாள் அமைச்சர் ரேவண்ணாவின் ஜாமினை ரத்து செய்யக் கோரி மனு..!!