×

குடிநீர் தொட்டி கல்வெட்டு விழுந்து சிறுமி படுகாயம்

தேனி, பிப். 18: ஆண்டிபட்டி அருகே, சுப்புலாபுரத்தில் குடிநீர் தொட்டியில் அரசு வைத்த கல்வெட்டு விழுந்து படுகாயம் அடந்த சிறுமிக்கு, உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என தேனி கலெக்டரிடம் தாயார் மனு அளித்தனர். ஆண்டிபட்டி அருகே உள்ள டி.சுப்புலாபுரம் கிராமத்தில் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பாக ஊராட்சி ஒன்றியத்தின் சார்பில் கால்நடைகள் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது. குடிநீர் தொட்டியில் திறப்பு விழாவை குறிக்கும் கல்வெட்டு வைக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த 6ம் தேதி அப்பகுதியை சேர்ந்த காளிராஜ் என்ற கூலிதொழிலாளியின் மகள் புவனேஸ்வரி (8), குடிநீர் தொட்டி அருகே விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது குடிநீர் தொட்டியில் பதித்திருந்த கல்வெட்டு சிறுமி மீது விழுந்தது. இதில், சிறுமிக்கு கால்முறிவுடன் பலத்த காயம் ஏற்பட்டது.

இதற்கு தேனி அரசினர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில், சிறுமியுடன் வந்த அவரது தாயார் பழனியம்மாள், தேனி கலெக்டர் பல்லவி பல்தேவிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
டி.சுப்புலாபுரம் கிராமத்தில் ஆடு, மாடு தண்ணீர் குடிக்கும் தொட்டியில் இருந்த அரசின் கல்வெட்டு, எனது மகள் புவனேஸ்வரி தலையில் விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த எனது மகளுக்கு 32 தையல் போடப்பட்டு
சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அரசின் அலட்சியத்தால் கல்வெட்டை சரியாக பதிக்காததால் விபத்து ஏற்பட்டு, எனது மகளுக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, எனது குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்க வேண்டும். விபத்துக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என மனுவில் தெரிவித்துள்ளார்.

Tags : baby girl ,
× RELATED மூன்றாவதாக பிறந்த பெண் சிசு திடீர் சாவு