×

இளம்வயது திருமணத்துக்கு துணை போனால் நடவடிக்கை

நாமக்கல், பிப்.17: கொல்லிமலையில் இளம்வயது திருமணம் தடுத்தல், சட்டப்படி குழந்தைகளை தத்தெடுத்தல், பெண் குழந்தைகளை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது. இதற்கு கலெக்டர் மெகராஜ் தலைமை வகித்து பேசியதாவது: 18 வயதிற்கு கீழ் பெண் குழந்தைகளை திருமணம் செய்து கொடுப்பது, சட்ட விரோதமானதாகும். இளம் வயது திருமணம் நடைபெற்றால், சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ்நாட்டில் அனைத்து திட்டங்களும் பெண்களை மையப்படுத்தி நிறைவேற்றப்பட்டு வருகின்றன. இவை குறித்து கொல்லிமலை மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக தான், விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள், கருத்தரங்கம், மாணவர்களுக்கான பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு உள்ளன.

அனைவரும் தங்கள் பெண் குழந்தையை, கல்லூரி படிப்பை முடித்த பின்னர் தான் திருமணம் செய்து கொடுப்போம் என உறுதி ஏற்க வேண்டும். மலைவாழ் மக்கள் பட்டப்படிப்பு முடித்தால், அரசு வேலை கட்டாயம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. இவ்வாறு கலெக்டர் மெகராஜ் தெரிவித்தார்.
தொடர்ந்து 50க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு, வருவாய் துறையின் சார்பில் இந்து மலையாளி சாதிச்சான்றிதழ் வழங்கப்பட்டது. கருத்தரங்கில் சேந்தமங்கலம் எம்எல்ஏ சந்திரசேகரன், சேலம் மண்டல குடும்ப நல துணை இயக்குனர் டாக்டர் வளர்மதி, பரமத்திவேலூர் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர் டாக்டர் சாந்தி, மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் ரஞ்சிதா பிரியா ஆகியோர் பேசினர். மருத்துவ நலப்பணிகள் (இணை இயக்குனர்) சாந்தி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சீனிவாசன், கொல்லிமலை ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் மாதேஸ்வரி அண்ணாதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : teen ,
× RELATED பெண்ணுக்கு மிரட்டல் விடுத்த வாலிபர் கைது