×

அடையாறு வெள்ள தடுப்புச்சுவர் கட்டுவதில் முறைகேடு அதிகாரிகள், ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் : பொதுப்பணித்துறை செயலாளரிடம் மா.சுப்பிரமணியன் எம்எல்ஏ மனு

சென்னை: அடையாறு ஆற்றங்கரையில் ரூ.15.75 கோடியில்  வெள்ள தடுப்புசுவர் கட்டி, மோசடியில் ஈடுபட்ட அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக எம்எல்ஏ மா.சுப்பிரமணியன் பொதுப்பணித்துறை செயலாளரிடம் மனு அளித்துள்ளார்.இதுகுறித்து அவர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: ஒவ்வொரு பருவ மழைக்கும் சைதாப்பேட்டை அடையாறு ஆற்றங்கரை ஓரம் வசிக்கும் லட்சக்கணக்கான பொதுமக்கள் தொடர்ந்து பெரும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். இந்த பாதிப்புகள் சம்பந்தமாக கடந்த காலங்களில் திமுக சார்பில் சைதை தொகுதி மக்களை ஒருங்கிணைத்து மிகப்பெரிய போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது. அத்துடன் தமிழக சட்டமன்றத்திலும் பலமுறை இதுகுறித்து அரசின் கவனமும் ஈர்க்கப்பட்டது. இந்நிலையில், 42 கிலோ மீட்டர் தூரமுள்ள அடையாறு ஆற்றங்கரையில் 875 மீட்டர் தூரத்திற்கு மட்டும் ரூ.15.75 கோடி மதிப்பீட்டில்  வெள்ள தடுப்புச் சுவர் கட்டப்பட்டு வருகிறது. அப்பணியினை பார்வையிட சென்றபோது அதிர்ச்சி அளிக்கும் வகையில் மாபெரும் முறைகேடுகள் அங்கு நடந்து கொண்டிருப்பது தெரிந்தது.

அந்த பணியின் கட்டுமான விதிமுறைகளின்படி எம்.சாண்ட் பயன்படுத்தி கான்கிரீட் போட்டிருக்க வேண்டும். ஆனால் அந்த ஆற்றிலேயே உள்ள புழுதி கலந்த, கட்டுமான பணிகளுக்கு லாயக்கில்லாத மணலை பயன்படுத்தி கான்கிரீட் தடுப்புச் சுவர்கள் அமைக்கும் பணி செய்து வருகின்றனர்.
அதோடு மட்டுமல்லாமல், ஸ்பெசிபிக்கேசனில் உள்ளதுபடி ஆழம் தோண்டி கான்கிரீட் அமைக்காமலும், தகுந்த கட்டுமானப் பொருட்களைக் கொண்டும் பணி நடைபெறவில்லை. ஏற்கனவே இருந்த பழைய வெள்ளத்தடுப்புச் சுவர்களில் பயன்படுத்திய கருங்கல் சக்கைகள் எடுக்கப்பட்டு இப்போது கட்டப்படும் கான்கிரீட் சுவர்களுக்கு முழுமையாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இரவு நேரங்களில் ஆற்றை ஆழப்படுத்தி நூற்றுக்கணக்கான லாரிகளின் மூலம் மணல் கொள்ளையடிக்கப்பட்டும் வருகிறது.

இவ்வளவு முறைகேடுகளுடன் கட்டப்படுகிற இந்த வெள்ளத்தடுப்புச் சுவரின் தரம் என்பது எதிர்காலத்தில் கேள்விக்குறியாகவே இருக்கும். இதனால் லட்சக்கணக்கான மக்கள் பாதிப்புக்குள்ளாவார்கள். குறிப்பாக சைதை தொகுதிக்குட்பட்ட ஜோதிராமலிங்கம் நகர், சாரதி நகர், நாகிரெட்டி தோட்டம், துரைசாமி தோட்டம், ரத்தின தோட்டம், விநாயகபுரம், செட்டி தோட்டம், ஜோதியம்மாள் நகர், நெருப்புமேடு, ஜோகி தோட்டம், அபித் காலனி, சாமியார் தோட்டம், கோதாமேடு, அண்ணாநகர், திடீர் நகர், ஆரோக்கிய மாதா நகர் குடிசைகள், சத்யா நகர், சூர்யா நகர், சித்ரா நகர், கோட்டூர்புரம் போன்ற குடிசைப்பகுதிகள் ெபரும் பாதிப்புக்குள்ளாகும். எனவே உடனடியாக இக்கட்டுமானப் பணிகளை தகுந்த முறையில் ஆய்வு செய்து உண்மைகளை கண்டறிய வேண்டும். இத்தகைய முறைகேடுகளுக்கு தொடர்புடைய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்திட வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Tags : Mullaperiyar ,contractor ,Secretary of Public Works ,Adyar ,
× RELATED முல்லைப்பெரியாறு அணை நீர் திறப்பு...