துபாய்: ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் முதலிடத்தில் இருந்த ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் ஸ்மித் 3வது இடத்திற்கு சறுக்கினார். இந்தியாவுக்கு எதிராக மெல்போர்னில் நடந்த 2வது டெஸ்டில் இரு இன்னிங்சிலும் (0, 8 ரன்) ஒற்றை இலக்கத்தில் வீழ்ந்ததால் அவர் 24 புள்ளிகளை இழந்துள்ளார். 3வது இடத்தில் இருந்த நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் முதல் இடத்திற்கு முன்னேறி உள்ளார். வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக இரட்டை சதம், பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது டெஸ்டில் சதம் விளாசிய அவர் 13 புள்ளிகள் கூடுதலாக பெற்று மொத்தம் 890 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்திருக்கிறார். இந்திய கேப்டன் விராட் கோஹ்லி 9 புள்ளிகளை இழந்தாலும் தொடர்ந்து 2வது இடத்தில் நீடிக்கிறார். 2020ம்ஆண்டில் ஸ்மித் 313 நாட்களும், கோஹ்லி 51 நாட்களும் முதலிடத்தில் இருந்துள்ளனர். டாப் 10 பட்டியலில் இந்திய வீரர்கள் ரகானே 6வது இடத்திலும், புஜாரா 10வது இடத்திலும் உள்ளனர். தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ள கேன் வில்லியம்சன் கூறியிருப்பதாவது: என்னை பொறுத்தவரை விராட் கோஹ்லி மற்றும் ஸ்டீவ் ஸ்மித் தான் சிறந்த வீரர்கள். இருப்பினும் நான் முதலிடத்தை பிடித்துள்ளது மகிழ்ச்சியையும் ஆச்சர்யத்தையும் அளிக்கிறது. ஸ்டீவ் ஸ்மித் மற்றும் கோலி பேட்டிங்கில் அனைத்து வடிவங்களிலும் ஆண்டுக்கு ஆண்டு முன்னேற்றமடைந்து கொண்டே செல்கின்றனர். அவர்கள் இருவரும் கிரிக்கெட்டை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திக் கொண்டு செல்கின்றனர். அவர்களுக்கு எதிராக விளையாடுவதை அதிர்ஷ்டமாக உணர்கிறேன். பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் நாங்கள் இறுக்கமான முடிவுகளை பெற்றுள்ளோம். கடைசி நாளில் ஆட்டத்தின் முடிவு 25 நிமிடங்கள் வரை சென்றுவிட்டது. இரு அணிகளும் நம்பமுடியாத அளவிற்கு போராடின. பாகிஸ்தான் முன்வைத்த போராட்டம் வலுவாக இருந்தபோதிலும் நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம். டெஸ்ட் சாம்பியன் ஷிப் பைனல் வாய்ப்புக்கு போட்டி போடுவது மிகவும் உற்சாகமானது என்றார்….
The post என்னை விட கோலி ஸ்மித் தான் சிறந்த வீரர்கள்: நம்பர் ஒன் பேட்ஸ்மேன் வில்லியம்சன் பேட்டி appeared first on Dinakaran.