×

ஊசூர் அடுத்த புலிமேடு மலையடிவாரத்தில் பாக்கெட் சாராயம் விற்பனை படுஜோர் கண்டுகொள்ளாத போலீசார்

அணைக்கட்டு, பிப்.13: ஊசூர் அடுத்த புலிமேடு மலையடிவாரத்தில் பாக்கெட் சாராயம் விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது. இதனை போலீசார் கண்டுகொள்ளவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா புலிமேடு கிராமத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் சிலர் அரசு அலுவலர்களாக உள்ளனர். சிலர் கூலி வேலை செய்து வருகின்றனர். ஆனால் பெரும்பாலானோர் பூச்செடிகளை வளர்த்து பூ வியாபாரம் செய்து வாழ்க்கை நடத்தி வருகின்றனர். ஊசூரிலிருந்து 7 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்த கிராமத்தில் வசிக்கும் மக்கள், அரசு மருத்துவமனை, கல்வி, பயிற்சி நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கு ஊசூர் வந்து செல்கின்றனர். இந்நிலையில், புலிமேடு மலைஅடிவாரம் மற்றும் கொல்லைமேடு பகுதியில் பல ஆண்டுகளாக ஒரு கும்பல் சாராயத்தை பாக்கெட் செய்து விற்பனை செய்து வருகின்றனர்.

இதற்காக மலையில் ஒரு இடத்தில் காய்ச்சி டியூப்களில் அடைத்து அதனை எடுத்து வந்து அடிவாரத்தில் அமர்ந்து தொடர்ந்து சாராய விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். காலையிலே தொடங்கி இரவுவரை படுஜோராக சாராயம் விற்பனை நடப்பதால், இதற்கு அடிமையாகி கிடக்கும் சிலர் அங்கே குடித்துவிட்டு கோயில் பின்புறத்தில் படுத்து கொண்டு அவ்வழியாக செல்வோரிடம் வீண் தகராறில் ஈடுபட்டு வருகின்றனர். கோயில் அருகே குடித்துவிட்டு காலிசாராய பாக்கெட்டுகளை வீசிவிட்டு சென்றிருப்பதால் கோயிலுக்கு வரும் பக்தர்கள் சிரமப்படுகின்றனர். முதலில் மலை அடிவாரத்தின் ஒரு பக்கத்தில் மட்டுமே இது போன்ற பாக்கெட் சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்த அந்த கும்பல் கிளை தொடங்கியது போன்று தற்போது மலை அடிவாரத்தை சுற்றியிலும் ஆக்கிரமித்து விற்பனையில் ஈடுபட்டு வருவதாகவும், கிராமத்தினர் யாரவது தட்டி கேட்டால் அவர்களை கத்தியை காட்டி மிரட்டுவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இந்த தொடர் சாராய விற்பனயைில் ஈடுபட்டு வருபவர்களை கைது செய்ய கோரி, சிலர் அரியூர் போலீசில் புகார் அளித்தாலும் நடவடிக்கை இல்லையம். சில சமயங்களில் கண்துடைப்புகாக வரும் போலீசார், நாங்கள் வருவதற்குள் அவர்கள் தப்பி ஓடிவிட்டதாக கூறி நடவடிக்கை எடுக்காமல் சென்றுவிடுகிறார்களாம். அங்கு சாராயம் குடிக்க வரும் குடிமகன்களால், தங்களது பிள்ளைகளுக்கு ஆபத்து ஏற்பட்டுவிடுமே என குறிப்பாக பெண் பிள்ளைகளை, பள்ளி, கல்லூரிக்கு அனுப்ப பெற்றோர் தயங்குகின்றனர். எனவே அப்பகுதியில் முற்றிலுமாக சாராயத்தை ஒழிக்க சிறப்பு பிரிவு போலீசார் களமிறங்கி கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என புலிமேடு பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : Badujore ,hill ,Usoor ,
× RELATED ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே...