×

மாமல்லபுரம் கடற்கரைக்கு செல்ல குறுகலான நடைபாதை

மாமல்லபுரம், பிப்.13: மாமல்லபுரம் கடற்கரைக்கு செல்லும் குறுகலான நடைபாதையால் சுற்றுலா பயணிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். இதனால், அந்த நடைபாதையை அகலப்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.கடந்த 7ம் நூற்றாண்டில் பல்லவர்கள் வாழ்ந்த காலத்தில் மாமல்லபுரத்தில் உள்ள பாறைகளை குடைந்து உருவாக்கப்பட்ட புராதன சின்னங்கள் உள்ளன. இதனை கண்டு ரசிக்க தினமும் உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.அதில், மாமல்லபுரம் கடற்கரை கோயிலை தொல்லியல் துறையினர் பராமரித்து வருகின்றனர். இதனை காண வரும் உள்நாட்டு பயணிகளுக்கு ₹40, வெளிநாட்டு பயணிகளுக்கு ₹600 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த கட்டணத்தை செலுத்தி நுழைவு சீட்டு வாங்கிய பிறகே கடற்கரை கோயில், ஐந்து ரதம், வெண்ணெய் உருண்டை பாறை ஆகிய இடங்களுக்கு செல்ல பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில், மாமல்லபுரம் கடற்கரைக்கு செல்லும் பயணிகள், கடற்கரை கோயில் ஒட்டிள்ள குறுகலான நடைபாதையில் சென்று திரும்பி வருகின்றனர். இந்த குறுகலான நடைபாதை சுற்றுலா வளர்ச்சி கழகம் நிர்வகித்து வருகிறது. இந்த நடைபாதை அருகே கைவினை பொருட்கள் விற்கும் கடைகள் அமைந்துள்ளன.

அரசு விடுமுறை தினங்களில் வரும் சுற்றுலா பயணிகள், அந்த பாதையில் செல்ல கடும் சிரமப்படுகின்றனர். இதனால், தள்ளு முள்ளு உருவாகி பயணிகளுக்குள் வாக்குவாதம் ஏற்படுகிறது. வயதான முதியவர்கள் இந்த பாதையில் செல்ல அச்சப்படுகின்றனர். சிலர் நிலைதடுமாறி விழுந்து காயமடையும் சம்பவம் ஏற்படுகிறது.மேலும், இங்கு வரும் பயணிகள் கடலில் குளிப்பது வழக்கம். அப்போது ஒரு சிலர் ராட்சத அலையில் சிக்குகின்றனர். அதுபோன்ற சயத்தில், அலையில் சிக்குபவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து செல்ல, ஆம்புலன்ஸ் இந்த பாதையில் செல்ல முடியாத சூழல் உள்ளது. இதனால், முதலுதவி சிகிச்சை அளிப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. சில உயிரிழப்பு சம்பவமும் நடப்பது வேதனை அளிக்கிறது என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.அதில், இதுவரை 200க்கும் மேற்பட்டோர் ராட்சத அலையில் சிக்கி, அவர்களை மீட்டு முதலுதவி சிகிச்சை அளிக்க முடியாமல் பரிதாபமாக இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் கடந்த ஆண்டு அக்டோபர் மாத சந்திப்புக்கு முன் மாமல்லபுரத்தில் உள்ள முக்கிய இடங்களை ஆய்வு செய்த தலைமை செயலாளர் சண்முகம், குறுகலான நடைபாதையில் உள்ள அனைத்து கடைகளையும் அகற்றி பாதையை அகலப்படுத்த உத்தரவிட்டார். மேலும், நடைபாதை அருகே கடை வைத்திருப்பவர்களுக்கு தனி இடம் வழங்க வேண்டுமான வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு  அறிவுறுத்தினார்.ஆனால், பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் வந்து சென்ற பிறகு,  இந்த விஷயம் சம்பந்தமாக அதிகாரிகள் தரப்பில் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.எனவே, சம்பந்தப்பட்ட உயரதிகாரிகள் உடனடியாக தலையிட்டு கடற்கரைக்கு செல்லும் நடைபாதையை அகலபடுத்தி, கடை வைத்திருக்கும் அனைவருக்கும் மாற்று இடம் வழங்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

Tags : Mamallapuram ,beach ,
× RELATED மாமல்லபுரம் கடற்கரை கோயில்...