×

எல்லாபுரம் அடுத்த பேரண்டூர் கிராமத்தில் ஏரிக்கரை ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்

ஊத்துக்கோட்டை: எல்லாபுரம் ஒன்றியம் பேரண்டூர் கிராமத்தில் ஏரிக்கரையை ஆக்கிரமித்து கட்டியிருந்த 31  வீடுகளை பொதுப்பணி துறையினர் அதிரடியாக அகற்றினர். குடிசையை இழந்தவர்களுக்கு மாற்று இடம் ஒதுக்கப்பட்டது.எல்லாபுரம் ஒன்றியத்தில் உள்ள ஏரியில் குடிமராமத்து பணியை தொடங்கி வைக்க கடந்த ஆகஸ்ட் மாதம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வந்தார்.  அப்போது  திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் ஊத்துக்கோட்டை அருகேயுள்ள பேரண்டூர் ஏரியை பார்வையிட்டார். அப்போது, அங்கிருந்த கிராம மக்கள் கலெக்டரிடம், இந்த ஏரியை தனியார் சிலர்ஆக்ரமிப்பு செய்துள்ளனர். இந்த ஏரிக்கு கால்வாய் இல்லை. மேலும், ஏரியின் மையப்பகுதியில் பயிர் வைத்துள்ளனர்.  விவசாயிகள் சிலர் ஏரிகரையை வெட்டி விடுகிறார்கள் என கூறினர். இதைக்கேட்ட கலெக்டர், உடனே சர்வேயரை அழைத்து இந்த ஏரியை உடனே அளவீடு செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.பின்னர், ஏரியை விட்டு வெளியே வந்த கலெக்டரை அப்பகுதி ஏரிகரையில் குடியிருக்கும்  மக்கள் முற்றுகையிட்டு, ‘நாங்கள் பல வருடங்களாக ஏரிக்கரை ஓரத்தில் வசித்து வருகிறோம். எங்களை காலி செய்ய சொல்கிறார்கள், எங்களுக்கு வேறு இடத்தை ஒதுக்க வேண்டும்’ என கூறினர்.

இதை கேட்ட கலெக்டர், ‘மாற்று இடம் இருந்தால் ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என கூறினார். பின்னர், அனைவரும் கலைந்து சென்றனர்.இந்நிலையில், நேற்று ஊத்துக்கோட்டை தாசில்தார் முருகநாதன்,  பொதுப்பணித்துறை உதவிப்பொறியாளர் பிரிதிவி பாலசுந்தரம், மண்டல துணை வட்டாட்சியர் காதர் பர்வின், வருவாய் ஆய்வாளர் யுகேந்தர், விஏஒ சரவணன்  ஆகியோர் நேற்று பொக்லைன் இயந்திரங்களுடன் வந்தனர். ஏரிக்கரையை ஆக்கிரமித்து கட்டியிருந்த 31 வீடுகளை இடித்து தள்ளினர். நிலத்தை கையகப்படுத்தினர். குடிசைகளை இழந்த அனைவருக்கும் இதே கிராமத்தில் 200 மீட்டர் தொலைவில் தோப்பு புறம்போக்கு நிலத்தில் தலா ஒன்றரை சென்ட் இடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக வருவாய்த்துறையினர் தெரிவித்தனர்.

Tags : evacuation ,village ,Ellapuram ,
× RELATED கடலூர் அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை...