×

திருப்புத்தூர் தெருக்களில் குப்பைகளுக்கு தொடர்ந்து தீ வைப்பு புகை மூட்டத்தால் பொதுமக்கள் அவதி

திருப்புத்தூர், பிப். 12: திருப்புத்தூர் பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளிலும் தினந்தோறும் காலை, மாலை வேலைகளில் வீடு மற்றும் கடைகளில் குப்பை கழிவுகளை பேரூராட்சி பணியாளர்கள் வாங்கி அதை மொத்தமாக டிராக்டரில் கொண்டு வந்து சிவகங்கை ரோட்டில் சாலையின் இடதுபிறமாக உள்ள கண்மாய் பகதியில் கொட்டுகின்றனர். இந்நிலையில், பேரூராட்சி பணியாளர்கள் தெருக்கள், குடியிருப்பு பகுதிகளில் சில குப்பைகளை மட்டும் வாங்கி கொள்கிறார்கள். சில குப்பைகளை வாங்கி ரோட்டின் ஓரத்தில் குவித்து வைத்து தீயை பற்ற வைக்கின்றனர். குறிப்பாக நடுத்தெரு, அக்ரஹார தோப்பு தெரு, அஞ்சலகவீதி, மதுரை ரோடு உள்ளிட்ட பல இடங்களில் குப்பைகளுக்கு தொடர்ந்து தீ வைத்து எரிக்கப்படுகிறது. இதனால் குப்பைகளிலிருந்து வரும் புகை அப்பகுதிகள் முழுவதும் பரவுகிறது. இதனால் அப்பகுதியில் பள்ளிகளுக்கு செல்லும் மாணவ, மாணவியர்கள் மூக்கை பொத்தியவாறு செல்கின்றனர்.
 மேலும் குடியிருப்பு பகுதிகளில் உள்ள வயதானவர்களும், நோய்வாய்ப்பட்டவர்களும் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்.  பிளாஸ்டிக் கழிவுகளில் இருந்து வரும் புகை என்பதால் அப்பகுதிகள் முழுவதும் காற்று மாசுபடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே பேரூராட்சி நிர்வாகம் இதை கண்காணித்து தெருக்களில் குப்பைகளை தீ வைப்பதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : fires ,streets ,Tirupur ,
× RELATED திருப்பூர் மத்திய பேருந்து...