×

மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணர்வு முகாம்

பரமத்திவேலூர், பிப்.12:  நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கொரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமின்போது, பரமத்திவேலூர் பஸ் ஸ்டாண்டில் நிறுத்தப்பட்டிருந்த பஸ்களில் மருந்து தெளிக்கப்பட்டது. பரமத்திவேலூர் பேருந்து நிலையத்தில் பேரூராட்சி மற்றும் சுகாதாரத்துறை சார்பில் கொரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் மெகராஜ் உத்தரவின்பேரில், சுகாதாரத்துறை மாவட்ட இணை இயக்குனர் ஆலோசனையின்பேரில், சேலம் மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் கனகராஜ் ஆகியோர் பரிந்துரையின்பேரில், வேலூர் பேரூராட்சி மற்றும் சுகாதாரத்துறை சார்பில் இம்முகாம் நடைபெற்றது. வேலூர் பேரூராட்சி செயல் அலுவலர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். துப்புரவு ஆய்வாளர் செல்வகுமார், எழுத்தர் விஜயன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மணிவண்ணன் வரவேற்றார். வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கௌரி தலைமையிலான மருத்துவ குழுவினர் கலந்துகொண்டு கொரோனா வைரஸ் காய்ச்சல் குறித்தும், நோய் வராமல் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், நோயின் அறிகுறிகள் குறித்தும் பொதுமக்களுக்கு விளக்கி கூறினர். மேலும், துண்டு பிரசுரங்களை விநியோகித்தனர்.

அப்போது, மருத்துவ அலுவலர் கௌரி பேசியதாவது: கொரோனா வைரஸ் என்பது மனிதர்களுக்கு சளி, இருமல், காய்ச்சல் மற்றும் மூச்சுத் திணறல் ஆகியவற்றை ஏற்படுத்தக்கூடிய ஒரு வகையான வைரஸ் கிருமியாகும். சீனாவில் உள்ள வூகான் நகரத்தில் இருந்து கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த நோய் அறிகுறிகள் கண்டவர்கள் இருமும்போதும், தும்மும்போதும் வெளிப்படும் திரவங்கள் மூலம் நோய்கள் பரவுகிறது. எனவே, வாய் மற்றும் மூக்கை  துணியால் மூடிக் கொள்ள வேண்டும். சிகிச்சை தரும் அனைத்து மருத்துவமனைகளிலும் கிருமி நாசினி கொண்டு சுத்தமாகக் துடைத்து பராமரிக்க வேண்டும். சளி, இருமல், காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனே அருகில் உள்ள மருத்துவரை அணுகவேண்டும்.  இளநீர், கஞ்சி போன்ற நீர்ச்சத்துள்ள ஆகாரங்களை பருக வேண்டும். சளி- இருமல் காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் உள்ளவர்கள் பொதுமக்கள் கூடும் இடங்களுக்கு செல்வது, விழாக்களில் பங்கேற்பது போன்றவற்றை தவிர்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். அதனைத்தொடர்ந்து பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த பேருந்துகளுக்கு கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து தெளிக்கப்பட்டது. இம்முகாமில் சுகாதார ஆய்வாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் பேரூராட்சி துப்புரவு பணியாளர்கள், அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர். இதேபோல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விழிப்புணர்வு ஊர்வலம்  நடந்தது.

Tags : Corona Antivirus Awareness Camp ,District ,
× RELATED முட்டை விற்பனை ஜோர்