×

கெலமங்கலம் அருகே புறம்போக்கு நிலத்தில் கட்டிய வீடுகளை அதிகாரிகள் ஆய்வு

தேன்கனிக்கோட்டை, பிப்.12: கெலமங்கலம் அருகே போடிசிபள்ளி கிராமத்தில், அரசு புறம்போக்கு நிலத்தில் கட்டப்பட்ட வீடுகளை வருவாய்த்துறை அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர். தேன்கனிக்கோட்டை தாலுகா, கெலமங்கலம் அருகே உள்ள போடிசிப்பள்ளி கிராமத்தில் 50க்கும் மேற்பட்ட ஆதிதிராவிட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் அப்பகுதியிலுள்ள புறம்போக்கு நிலத்தை வழிப்பாதையாக பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள், அந்த புறம்போக்கு நிலத்தில் வீடுகளை கட்டி, தனியாருக்கு சொந்தமான பட்டா நிலத்தில் வழிப்பாதைக்கு நிலம் விட்டிருந்தனர். கடந்த 2 வருடங்களாக பட்டா நிலத்தில் செல்லக்கூடாது என சிலர் தகராறு செய்து வருகின்றனர். இதனால், ஆதிதிராவிட மக்கள், ஆக்கிரமிக்கப்பட்ட பொது வழிப்பாதையை மீட்டு தர வேண்டும் என கலெக்டரிடம் கோரிக்கை விடுத்தனர்.

 இதையடுத்து, புறம்போக்கு நிலத்தில் கட்டியுள்ள வீடுகளை, தாங்களாகவே முன்வந்து அகற்ற வேண்டும் என 10க்கும் மேற்பட்டவர்களுக்கு வருவாய்த்துறையினர் 2 முறை நோட்டீஸ் அனுப்பினர். அவர்கள் வீடுகளை காலி செய்யாததால், நேற்று துணை தாசில்தார் சிவப்பா, நில அளவையர் ராமன், கிராம நிர்வாக அலுவலர் நல்லதம்பி, ராயக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவலிங்கம், கெலமங்கலம் எஸ்ஐ செல்வராகவன் ஆகியோர் புறம்போக்கு நிலங்களில் கட்டியுள்ள வீடுகளை ஆய்வு செய்தனர். அதில் வருவாய்த்துறை வரைபட பதிவேட்டில் நத்தம் எனவும், ‘அ’ பதிவேட்டில் வாரி புறம்போக்கு எனவும் உள்ளதால், உயர் அதிகாரிகளின் ஆலோசனைக்கு பின், நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்து அங்கிருந்து சென்றனர்.

Tags : houses ,outskirts ,Kelamangalam ,
× RELATED கெலமங்கலம் அருகே மாட்டுத்தீவனம்...