×

டெம்போ மோதியதில் நொறுங்கியது குமரி கலெக்டர் பங்களா சுவர் இடிந்து பெண் போலீஸ் படுகாயம்

நாகர்கோவில், பிப்.12:  நாகர்கோவிலில் கலெக்டர் பங்களா காம்பவுண்ட் சுவர் மீது டெம்போ மோதியதில், பாதுகாப்பு பணியில் இருந்த பெண் போலீஸ் படுகாயம் அடைந்தார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நாகர்கோவில் கோணத்தில் கலெக்டர் பங்களா உள்ளது. இங்கு 24 மணி நேரமும் போலீசார் பாதுகாப்பு பணியில் இருப்பார்கள். நேற்று காலை கலெக்டர் பங்களா, வளாகத்தை சுத்தம் செய்வதற்காக மாநகராட்சி துப்பரவு பணியாளர்கள் சென்றனர். அப்போது குப்பைகளை ஏற்றி வருவதற்காக டெம்போவும் உள்ளே சென்றது. டெம்போவை பங்களாவுக்குள் டிரைவர் திருப்பிய போது, இடது பக்க கேட்டில் இடித்துள்ளது. இதில் திடீரென கேட்,  காம்பவுண்ட் சுவருடன் இடிந்தது. அருகில் பாதுகாப்பு பணியில் நின்ற பெண் போலீஸ் சித்ரா மீது கேட் மற்றும் சுவர் விழுந்தது.

இந்த சத்தம் கேட்டு கலெக்டர் அலுவலக பணியாளர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் வந்து சித்ராவை மீட்டனர். இடிபாடுகளில் சிக்கிய அவருக்கு தலை மற்றும் காலில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது காலில் பலத்த காயம் ஏற்பட்டு உள்ளது. இது தொடர்பாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று டாக்டர்கள் கூறி உள்ளனர். விபத்து குறித்து அறிந்ததும் நேசமணிநகர் போலீசார் மற்றும் நாகர்கோவில் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வந்து விசாரணை மேற்கொண்டனர். டெம்போ டிரைவரிடம் விசாரணை நடத்தினர். விபத்தில் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வரும் பெண் போலீஸ் சித்ராவை கலெக்டர் பிரசாந்த் எம். வடநேரே , எஸ்.பி. நாத் ஆகியோர் சந்தித்து உடல் நலம் விசாரித்தனர்.

சித்ராவின் கணவருக்கும் ஆறுதல் கூறினர். டீன் சுகந்தி ராஜகுமாரி, உறைவிட மருத்துவர் டாக்டர் ஆறுமுகவேலன் மற்றும் டாக்டர்களுடன் ஆலோசனை நடத்திய கலெக்டர்,  சித்ராவுக்கு தேவையான சிகிச்சையை உடனடியாக வழங்குமாறு கேட்டுக் கொண்டார். பலமிழந்த சுற்றுச்சுவரா?
கலெக்டர் அலுவலக பங்களா சுற்றுச்சுவரில் அமைக்கப்பட்டுள்ள கேட்டில், டெம்போ மோதி சுவர் இடிந்து விழுந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. டெம்போவும் மெதுவாக தான் திரும்பி உள்ளது. கேட் அமைக்க தனியாக பில்லர் எதுவும் அமைக்காமல், சுவருடன் சேர்த்து செங்கல் வைத்து தனியாக கட்டி கேட் பொருத்தி உள்ளனர்.் பலமாக இல்லாததால் தான் இந்த விபத்து நடந்ததாக கூறப்படுகிறது.

Tags : collector ,Kumari ,police crashes ,
× RELATED மதுரை மாவட்டத்தில் உள்ள கல்குவாரிகள்...