×

கோட்டார் ரயில்வே ரோட்டில் ரூ3.68 லட்சத்தில் பாலம் விரிவாக்க பணி

நாகர்கோவில், பிப்.12 : நாகர்கோவில் கோட்டார் ரயில்வே ரோட்டில், ரூ.3.68 லட்சம் மதிப்பீட்டில் சிறு பாலத்தை விரிவாக்கம் செய்யும் பணிகள் தொடங்கி நடந்து வருகின்றன. கோட்டாரில் உள்ள நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்துக்கு செல்ல சாலை வசதி போதுமானதாக இல்லை. கோட்டார் மார்க்கெட் ரோட்டில் லாரிகள் சாலைகளை ஆக்ரமித்து நிற்பதால், ரயில் நிலையத்துக்கு செல்ல வேண்டிய பயணிகள் பெரும் சிரமத்தை சந்திக்கிறார்கள். இதனால் சரியான நேரத்துக்கு ரயில் நிலையத்துக்கு செல்ல முடியாமல் சிலர் ரயிைல தவற விடுகிறார்கள். எனவே ரயில் நிலையத்துக்கு செல்ல புறவழிச்சாலை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இந்த நிலையில் சமீபத்தில் கோட்டார் மார்க்கெட் பகுதியில் ரயில்வேக்கு சொந்தமான இடத்தில், லாரிகளை நிறுத்தி சரக்குகளை ஏற்றி இறக்க தடை விதிக்கப்பட்டது.

மேலும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதை தவிர்க்கும் வகையில், மாநகராட்சிக்கு சொந்தமான சாலையில் மட்டும் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரையிலும், பின்னர் பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரையிலும் சரக்குகளை ஏற்றி இறக்கலாம் என உத்தரவிடப்பட்டது.
ஆனால் இந்த உத்தரவை மீறி லாரிகளில் சரக்குகள் ஏற்றி இறக்கி வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகி உள்ளனர்.
இதையடுத்து மாநகராட்சி சார்பில் கோட்டார்  ரயில் நிலையத்துக்கு செல்லக்கூடிய சாலையை விரிவாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இதற்கு வசதியாக சாலைகளை ஆக்ரமித்து இருந்த கட்டிடங்களை இடிக்க ஆணையர் சரவணக்குமார் உத்தரவிட்டார். அதன்படி மாநகராட்சி பொறியாளர் பாலசுப்பிரமணியம் தலைமையில் இதற்கான பணிகள் நடந்தன.

இந்த ரயில்வே ரோட்டில் செல்லும் கால்வாய் மீது அமைக்கப்பட்டுள்ள சிறுபாலம் மிகவும் குறுகியதாக உள்ளது. இதனால் இந்த பாலத்தை விரிவாக்கம் செய்ய மாநகராட்சி நடவடிக்கை மேற்கொண்டது. மாநகராட்சி ஆணையர் சரவணக்குமார் உத்தரவின் பேரில், ரூ3.68 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு இந்த சிறுபாலத்தை விரிவாக்கம் செய்யும் பணிகள் தொடங்கி உள்ளன. முதற்கட்டமாக சாலையின் இரு பக்கமும் பொக்லைன் மூலம் தோண்டும் பணி நடந்து வருகிறது. இந்த பாலத்தை விரிவாக்கம் செய்வதால், ரயில்வே ரோடு சற்று விரிவடையும். இதன் மூலம் வாகனங்கள் எளிதில் செல்ல முடியும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே ரயில்வே பாதுகாப்பு படையினரால், நோ பார்க்கிங் என அறிவிக்கப்பட்ட பகுதியில் லாரிகள், டெம்போக்கள் நிற்பதை தடுக்கும் வகையிலும், அவ்வாறு நிற்கும் வாகனங்களை உடனடியாக பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் தெரிவித்துள்ளனர்.

Tags : railway road ,Kotar ,
× RELATED காஞ்சிபுரம் ரயில்வே சாலை உள்ளிட்ட...