×

சிதம்பரத்தில் பரபரப்பு; இடிக்கப்பட்ட வீடுகளுக்கு மாற்று இடம் கோரி எம்எல்ஏ அலுவலகத்தில் திரண்ட மக்கள்

சிதம்பரம், பிப். 12: சிதம்பரம் நகரில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நீர்வழி ஆக்கிரமிப்புகளை பொதுப்பணித்துறையினர் அகற்றினர். அப்போது தில்லையம்மன் ஓடை உள்ளிட்ட பல்வேறு இடங்களைச் சேர்ந்த கூரை வீடுகள், மாடி வீடுகள் என 369 வீடுகள் இடித்து அகற்றப்பட்டன. இவர்கள் தங்களுக்கு மாற்று இடம் வேண்டும் எனக்கோரி தொடர்ந்து அரசு அதிகாரிகளிடம் வலியுறுத்தி வந்தனர். ஆனால் இந்த கோரிக்கை இதுவரை நிறைவேற்றப்படவில்லை. இந்நிலையில் வீடுகளை இழந்த சிதம்பரம் வாகீசன் நகர் பகுதி மக்கள் நேற்று சிதம்பரம் தொகுதி எம்எல்ஏ பாண்டியன் அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக அறிவித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்த சிதம்பரம் நகர போலீசார் அங்கு வந்தனர். பின்னர் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று விட்டு வந்த எம்எல்ஏ பாண்டியனிடம், பொதுமக்கள் கோரிக்கை மனுவை அளித்தனர்.

வீடுகளை இடித்து விட்டதால் தாங்கள் மிகவும் சிரமப்படுவதாகவும், வாடகை வீட்டில் வசித்துக் கொண்டு தற்போது வாடகை கொடுக்க கூட வழியில்லாமல் தவிப்பதாகவும், அதனால் உடனடியாக வீடு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு அதற்கு பதிலளித்த எம்எல்ஏ பாண்டியன், வீடுகள் குறித்து அரசுக்கு அதிகாரிகள் கோப்புகளை அனுப்பி உள்ளனர். வீட்டுமனை வழங்குவதற்கு பதிலாக மாடி வீடுகளாக கட்டுவதற்கான ஆலோசனை நடந்து வருகிறது. அதனால் விரைவில் அனைவரின் கோரிக்கையும் நிறைவேற்றப்படும் என உறுதியளித்தார். இதையடுத்து பொதுமக்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.

இதுபற்றி அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது: வீடுகள் இடிக்கப்பட்டதால் மிகவும் அவதிக்கு உள்ளாகி இருக்கிறோம். எம்எல்ஏ உறுதி அளித்தபடி இன்னும் ஒரு மாத காலத்திற்குள் எங்களுக்கு வீட்டுமனை வழங்கப்படாவிட்டால் சாலை மறியல், எம்எல்ஏ அலுவலகம் முற்றுகை போன்ற போராட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

Tags : Chidambaram ,office ,MLA ,houses ,
× RELATED திருச்சி – சிதம்பரம் சாலை பூவளூரில்...