×

ரேஷன் பொருட்கள் வாங்க 3 கி.மீ. தூரம் அலையும் கிராமமக்கள் பகுதிநேர ரேசன்கடை திறக்க கோரிக்கை

மானாமதுரை, பிப்.11:  மானாமதுரை அருகே நவத்தாவு, அழகுநாச்சிபுரம் கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் ரேசன் பொருட்களை வாங்க 3 கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்கின்றனர். முதியோர்கள், மாற்றுத்திறனாளிகளின் சிரமங்களை போக்க இப்பகுதியில் பகுதிநேர ரேசன்கடை திறக்க கோரிக்கை விடுத்துள்ளனர். மானாமதுரை தாலுகா அலுவலகம் அருகே உள்ள சூரக்குளம் பில்லறுத்தான் ஊராட்சிக்குட்பட்டது நவத்தாவு. அழகுநாச்சிபுரம், பாரதிநகர் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. நவத்தாவு, அழகுநாச்சிபுரம், பாரதிநகர் பகுதிகளில் 286 பேருக்கு ரேசன்கார்டுகள் உள்ளன. இவர்களுக்கு மாதம் தோறும் வழங்கவேண்டிய ரேசன்பொருட்களை வாங்க கொன்னக்குளம் கிராமத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் இயங்கி வரும் ரேசன்கடைக்கு தான் செல்லவேண்டும். நவத்தாவு கிராமம் தாயமங்கலம் இளையான்குடி ரோட்டின் அருகில் உள்ளது. அதேபோல அழகுநாச்சிபுரம், பாரதிநகர் ஆகியவை சிப்காட் தொழிற்பேட்டையின் பின்புறம் உள்ளன. இவர்கள் கொன்னக்குளம் ரேசன்கடையில் பொருட்கள் வாங்க வேண்டுமென்றால் 3 கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்லவேண்டும்.

ரேசன் கடை திறந்து இருக்கும் நேரத்தில் நடந்து செல்வதற்குள் கடை மூடப்பட்டு விடுவதால் பெரும்பாலான கிராமத்தினர் வெறும் கையுடன் திரும்பி செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால் முதியோர்கள், பெண்கள், மாற்றுத்திறனாளிகள் மிகுந்த அவதிக்குள்ளாகின்றனர். இதனால் இந்த கிராமங்களை சேர்ந்தவர்கள் பெரும்பாலான நாட்கள் கொன்னக்குளம் கிராமத்திற்கு சென்று பொருட்கள் வாங்க முடியாத நிலையில் உள்ளனர். இது குறித்து மாவட்ட வழங்கல் அலுவலர், வட்டவழங்கல் அலுவலர், கூட்டுறவு இணைப்பதிவாளர் உள்ளிட்டோருக்கு கடந்த ஒரு ஆண்டாக மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை என்று இப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

இதுபற்றி நவத்தாவு ஜெகதீஷ், பழனி  ஆகியோர் கூறுகையில், நவத்தாவு, அழகுநாச்சிபுரம் கிராமங்களில் உள்ள 200க்கும் மேற்பட்ட கார்டுதாரர்கள் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேல் நடந்து சென்று பொருட்களை வாங்க வேண்டியநிலை உள்ளது. சில நாட்கள் தாமதமாக சென்றால் பொருட்கள் இருப்பு இல்லை என்று திருப்பி அனுப்புகின்றனர். இதுகுறித்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் வட்ட வழங்கல் அலுவலகம், மாவட்ட வழங்கல் அலுவலகம், இணைப்பதிவாளர் அலுவலகம் உள்ளிட்ட அனைத்து அலுவலர்களுக்கும் புகார் மனு அனுப்பியும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. எனவே மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.

Tags : razan shops ,
× RELATED காய்கறி வியாபாரி ெகாலை வழக்கில் வேன்...