×

சம்பளம் வழங்க காஸ் ஏஜென்சிகள் மறுப்பு டெலிவரி மேன் சங்கத்தினர் புகார்

மதுரை, பிப். 11: முறையான சம்பளம் வழங்காத காரணத்தால், கேஸ் சிலிண்டருக்காக வாடிக்கையாளரிடம் டிப்ஸ் வாங்குகிறோம். எண்ணெய் நிறுவனம் வழங்கிய சம்பளத்தை வழங்கக்கோரி டெலிவரி மேன்ஸ் சங்கத்தினர் கலெக்டரிடம் புகார் மனு கொடுத்தனர். தமிழ்நாடு எல்.பி.ஜி சிலிண்டர் டெலிவரி மேன்ஸ் தொழிற்சங்கத்தை சேர்ந்த மாநில தலைவர் கணேஷ், மாவட்ட தலைவர் தங்கவேல் உள்ளிட்ட தொழிற்சங்கத்தினர். நேற்று மதுரை கலெக்டர் வினயிடம் கொடுத்த புகார் மனுவில், ‘கேஸ் சிலிண்டர் டெலிவரி மேன்களுக்கு மத்திய அரசு நிர்ணயம் செய்த மாத சம்பளத்தை வழங்க வேண்டும். சிலிண்டருக்கு ஆயில் நிறுவனத்தின் காப்பீடு செய்வது போல், சிலிண்டர் டெலிவரி செய்யும் தொழிலாளர்களின் உயிர் பாதுகாப்பிற்காக காப்பீடு செய்ய எண்ணெய் நிறுவனமும், அரசு அதிகாரிகளும் முன்வர வேண்டும். டெலிவரி மேன்கள் ஒரு நாளைக்கு 1.50 டன் முதல் 3 டன் சிலிண்டர்களை சுமந்து, சப்ளை செய்கிறோம். எங்களுக்கு வார விடுமுறையோ அரசு அறிவிக்கும் விடுமுறையே கிடையாது.

365 நாட்களுக்கு வேலை செய்யும் எங்களுக்கு சம்பளம் கிடையாது. வாடிக்கையாளர்கள் பில்க்கு மேல் கொடுக்கும் டிப்ஸை வைத்துதான் நாங்கள் வாழ்வாதாரம் நடத்தி வருகிறோம். டிப்ஸை வைத்துதான் நாங்கள் பயன்படுத்தும் வாகனத்திற்கு பெட்ரோல், டீசல் போட்டும், வாகன பழுதும் செய்து வருகிறோம். எங்களுக்கு நிரந்தரமாக மாத சம்பளம், பி.எப். இ.எஸ்.ஐ உள்ளிட்ட வசதிகள் செய்து தர வேண்டும் என தெரிவித்திருந்தனர்.
மனுவை மத்திய அரசுக்கும், உரிய எண்ணெய் நிறுவனங்களின் பார்வைக்கு அனுப்புவதாக கலெக்டர் தெரிவித்தார். முன்னதாக டெலிவரி மேன் தொழிற்சங்கத்தினர் சொக்கிகுளத்தில் இருந்து பேரணியாக ரேஸ்கோர்ஸ் வழியாக சென்று பாண்டியன் ஓட்டல் அருகில் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் ஏரியா அலுவலகத்தில் மனு அளித்தனர்.

Tags : Gas Agencies ,Delivery Man Association Complaints ,
× RELATED அரசு பாலிடெக்னிக்கில் மாணவர் சேர்க்கை