×

காக்களூர் ஏரியில் கழிவுநீர் கலப்பு

திருவள்ளூர், பிப். 11 : குடியிருப்புகளின் கழிவுநீரை, கால்வாய் வழியாக காக்களூர் ஏரியில் விடுவதால் நிலத்தடிநீர் முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளதோடு குடிநீர் மாசடைந்து வருவதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். திருவள்ளூர் அடுத்த காக்களூர் ஊராட்சியில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்புகள் உள்ளது. இந்த குடியிருப்புகளின் கழிவுநீர், அங்குள்ள பாதாள சாக்கடை வழியாக, கால்வாய் மூலம் அருகில் உள்ள காக்களூர் ஏரியில் கலக்கிறது. இதேபோல், கரையோரம் வசிப்பவர்கள் தங்களது வீடுகளின் கழிவுநீரை ஏரிக்குள் விடுகின்றனர். இதனால், தண்ணீர் பாசிபடர்ந்து காணப்படுகிறது. மேலும், காக்களூர் ஏரியின் நிலத்தடிநீர் முற்றிலும் மாசடைந்து உள்ளதாகவும், குடிநீர் மாசடைந்து வருவதாகவும் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில்,

காக்களூர் ஏரியை சுற்றிலும் ஏராளமான நகர்கள் உள்ளன. இப்பகுதி மக்களுக்கு சொந்தமான கால்நடைகளும் ஏரியில்தான் மேய்ச்சலுக்கு கொண்டு செல்லப்படுகிறது. ஏரியில் கழிவுநீர் வெளியேற்றப்படுவதால், இதை அருந்தும் கால்நடைகள் இறக்க நேரிடுகிறது. நிலத்தடி நீரும் பாதிக்கப்பட்டு வருவதால், சுகாதாரமான குடிநீரின்றி 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் அவதிப்படுகிறோம். எனவே, காக்களூர் ஏரியில், வீட்டுவசதி வாரிய குடியிருப்புகளின் கழிவுநீர் மற்றும் வீடுகளின் கழிவுநீரை வெளியேற்றுவதை தடுத்து நிறுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Tags : Kakaloor Lake ,
× RELATED சுற்றுலா தலமாக மாற்றும் பணி கிடப்பு...