×

அதிமுகவினர் அத்துமீறலே காரணம் என புகார் தலைமை செயலகத்தின் 7ம் நம்பர் கேட் திடீர் மூடல்

சென்னை, பிப்.11: சென்னையில் உள்ள தலைமை செயலகத்தில் சுமார் 2000க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள். அங்கு அமைச்சர்கள், அதிகாரிகளை பார்க்க தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கிறார்கள். தலைமை செயலகத்துக்குள் செல்ல 10 வழிகள் உள்ளன.
இதில், முதல்வர் 1ம் நம்பர் கேட்,  அமைச்சர்கள் 4, 6, 10 ஆகிய கேட், அரசு அதிகாரிகள், பார்வையாளர்கள் 4, 6, 7, 8ம் நம்பர் கேட் வழியாக செல்வார்கள். மாற்றுத் திறனாளிகள் 7ம் நம்பர் கேட் வழியாக செல்வது வழக்கம். அவர்கள்,  தலைமை செயலக அலுவலகம் வரை தங்களது ஸ்கூட்டரில் செல்ல முடியும். இந்த வழியாக பேட்டரி கார் செல்லவும் வசதி உள்ளது. அரசு ஊழியர்கள் தேநீர் மற்றும் மதிய இடைவேளைக்கு இந்த பாதையை அதிகளவில் பயன்படுத்துவார்கள்.

இந்நிலையில், நேற்று மதியம் 7ம் நம்பர் கேட் திடீரென பூட்டப்பட்டது. இதனால் அரசு ஊழியர்கள் அந்த வழியை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. குறிப்பாக, மாற்றுத் திறனாளிகள் அந்த வழியாக செல்ல முடியாமல் தவித்தனர். இதுகுறித்து தலைமை செயலக காவலரிடம் கேட்டபோது, அமைச்சர்களை பார்க்க அதிமுகவினர் தலைமை செயலகம் வருகிறார்கள். அவர்கள் முறையாக அனுமதி சீட்டு வாங்குவதில்லை. அதேபோல நேற்று அனுமதி சீட்டு இல்லாமல் அதிமுக பிரமுகர்கள் சிலரை, 7ம் நம்பர் கேட்டில் நிற்கும் காவலர்கள் தடுத்தனர்.  அதற்கு அவர்கள், காவலர்களை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளனர். இது தொடர்கதையாக நடக்கிறது. பலமுறை சம்பந்தப்பட்ட அமைச்சர்களிடம் சொல்லியும் எந்த நடவடிக்கையும் இல்லை. அதனால் தலைமை செயலக உயர் அதிகாரிகளின் உத்தரவுபடியே 7ம் நம்பர் கேட்டை பூட்டு போட்டு பூட்டிவிட நடவடிக்கை எடுக்கப்பட்டது” என்றார்.

Tags : closure ,Secretariat of Complaint ,
× RELATED மண்டல காலம் நிறைவு சபரிமலை கோயில் நடை...