×

ஓமலூர், காடையாம்பட்டியில் குடிநீரை சுத்திகரித்து விநியோகம் செய்ய வேண்டும்

ஓமலூர், பிப்.11: ஓமலூர், காடையாம்பட்டி, தாரமங்கலம் ஆகிய ஒன்றியங்களில் காய்ச்சல் பாதிப்புகளை களைய, குடிநீரை சுத்திகரிப்பு செய்து விநியோகம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஓமலூர், காடையாம்பட்டி, தாரமங்கலம் ஆகிய வட்டார கிராம ஊராட்சிகளில் வைரஸ் காய்ச்சல் பாதிப்புகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. அதிகாரிகள் நடத்திய ஆய்வில், கிராம ஊராட்சிகளில் மக்களுக்கு வினியோகிக்கப்படும் தண்ணீர் உரிய குளோரினேஷன் செய்யப்படுவதில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து பொது சுகாதாரப் பிரிவு பணியாளர்கள் கூறுகையில், ‘மேட்டூர் அணை நீரேற்று நிலையத்தில் தண்ணீரை குளோரினேஷன் செய்து குடிநீர் வடிகால் வாரியத்தினர் விநியோகித்தாலும், பல கி.மீ தூரம் பயணித்து, குழாயில் வந்து சேரும் தண்ணீரில் குளோரின் அளவு போதுமானதாக இருப்பதில்லை. எனவே, கிராம ஊராட்சிகளில் உள்ள குடிநீர் ஆபரேட்டர்கள், குடிநீர் தேக்கத் தொட்டியில் குளோரினேசன் செய்யும் பணியில் கவனம் செலுத்த வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. ஆயிரம் லிட்டர் குடிநீருக்கு 4 கிராம் என்ற அளவில் குளோரினேஷன் செய்ய வேண்டும். அவ்வாறு செய்யாத பட்சத்தில், துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்,’ என்றனர். இதுகுறித்து ஊராட்சி மன்ற தலைவர்கள் கூறுகையில், ‘கிராம ஊராட்சிகளில் டேங்க் ஆபரேட்டர்கள் எண்ணிக்கை மிகக்குறைவாக உள்ளது. ஆட்கள் பற்றாக்குறையால் 2 அல்லது 3 மாதத்திற்கு ஒரு முறைதான் குடிநீர் தொட்டி சுத்தம் செய்யப்படுகிறது. எனவே, ஊராட்சிகளில் போதியளவு பணியாளர்களை நியமித்தால் மட்டுமே எதிர்பார்த்த பலன் கிடைக்கும்,’ என்றனர்.

Tags : Kadayampatti ,
× RELATED காடையாம்பட்டி அருகே பயங்கரம் வெடி...