×

ஆர்டிஓவை கண்டித்து விஏஓக்கள் திடீர் ஆர்ப்பாட்டம்

நாமக்கல், பிப். 11: நாமக்கல் வருவாய் கோட்டாட்சியரை கண்டித்து திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கிராம நிர்வாக அலுவலர்கள், இ-அடங்கல் பதிவேற்றம் பணியை நிறுத்தப்போவதாக அறிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது. நாமக்கல் மாவட்டம் மோகனூர் தாலுகா ராசிபாளையம் கிராம நிர்வாக அலுவலர் அன்புராஜ்(40). இவரை நாமக்கல் வருவாய் கோட்டாட்சியர் கோட்டைகுமார், கடந்த மாதம் சேந்தமங்கலம் தாலுகாவில் உள்ள தூசூருக்கு இடமாறுதல் செய்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், வருவாய் கோட்டாட்சியரின் நடவடிக்கையை கண்டித்தும் நேற்று நாமக்கல்லில் தாசில்தார் அலுவலகம் முன் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர் திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் லட்சுமி நரசிம்மன் தலைமை வகித்தார். முன்னாள் மாவட்ட செயலாளர் பழனிசாமி, வட்டதலைவர் செந்தில்கண்ணன், செயலாளர் பிரகாஷ், பொருளாளர் ராமன் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட  கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டு, இடமாறுதல் உத்தரவை ரத்து செய்யக்கோரி கோஷங்களை எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்துக்கு பின்பு மாவட்ட செயலாளர் லட்சுமி நரசிம்மன் நிருபர்களிடம் கூறியதாவது: அன்புராஜை எந்த வித விசாரணையும் இன்றி வருவாய் கோட்டாட்சியர் தன்னிச்சையாக வேறு தாலுகாவுக்கு இடமாறுதல் செய்துள்ளார். இதை ரத்து செய்யக்கோரி மாவட்ட கலெக்டரிடம் முறையிட்டோம். இ-அடங்கல் கம்ப்யூட்டரில் பதிவேற்றம் செய்யும் பணியை விரைவாக முடியுங்கள். இடமாறுதல் உத்தரவை ரத்து  செய்ய சொல்கிறேன் என கூறினார். இதனால், பணிபுரியும் கிராமங்களில், போதுமான கணினி வசதி இல்லாதபோதும், கம்ப்யூட்டர் சென்டர் மற்றும் கம்ப்யூட்டர் கிடைக்கும் இடங்களில் உட்கார்ந்து பணியாற்றி இ- அடங்கல் பணியை செய்து வருகிறோம்.  ஆனால், கலெக்டர் கூறியும், அன்புராஜின் இடமாறுதல் உத்தரவை வருவாய் கோட்டாட்சியர் ரத்து செய்ய மறுத்துவிட்டார். இதே நிலை நீடித்தால், வரும் நாட்களில் இ- அடங்கல் பதிவேற்றம் செய்யும் பணியை  அனைத்து தாலுக்காவிலும் நிறுத்தவேண்டிய நிலை ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இதே கோரிக்கையை வலியுறுத்தி நேற்று நாமக்கல், ராசிபுரம், சேந்தமங்கலம், மோகனூர், கொல்லிமலை, பரமத்திவேலூர் மற்றும் திருச்செங்கோடு என 7 தாலுகாவிலும் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இடமாறுதல் செய்யப்பட்ட அன்புராஜ், தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தில் மோகனூர் வட்ட கிளை தலைவராக இருக்கிறார். இவர், நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள ஒரு வழக்கில், பட்டா மாறுதல் உத்தரவை ராசிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த ஒருவருக்கு வழங்கினார். இதை ரத்து செய்யும்படி வருவாய் கோட்டாட்சியர் கோட்டைகுமார் உத்தரவிட்டுள்ளார்.

சற்று தாமதமாக இந்த பணியை அன்புராஜ் செய்ததால் இடமாறுதல் செய்துள்ளதாக கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர் கூறுகிறார்கள். இதுகுறித்து வருவாய் கோட்டாட்சியர் கோட்டைகுமாரை தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் கூறுகையில், அன்புராஜ் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் வந்துள்ளது. குறிப்பாக பொதுமக்களிடம் லஞ்சம் வாங்குவதாக தொடர் புகார்கள் வந்துள்ளது. அவர் யாரிடம், எந்த வேலைக்காக பணம் வாங்கினார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக அவர் வேறு தாலுகாவுக்கு மாற்றப்பட்டுள்ளார் என்றார்.

Tags : VAOs ,RTO ,
× RELATED மேலூர் அருகே போலி பத்திரம் தயாரித்து...