×

குமாரபாளையம் அருகே திடீர் தீ 50 ஏக்கரில் காய்ந்த புற்கள் எரிந்து நாசம்

குமாரபாளையம், பிப்.11: குமாரபாளையம் அருகே, காய்ந்து கிடந்த தரிசு நிலத்தில் திடீரென தீப்பற்றி எரிந்ததில், 50 ஏக்கரில் காய்ந்த புற்கள் கருகி நாசமானது. பள்ளிபாளையம் அருகே, எலந்தக்குட்டை ஊராட்சி சில்லாம்பாறையை சேர்ந்த விவசாயி சின்னுசாமி. இவருக்கு சொந்தமான வயலில் நெல் அறுவடை நடைபெற்றது. இதில், கிடைத்த வைக்கோலை கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படுத்துவதற்காக ஒரு டிராக்டரில் ஏற்றி வீட்டிற்கு கொண்டு சென்றார். அப்போது, அந்த வழியாக சென்ற மின்கம்பியின் மீது உரசியதில் வைக்கோலில் தீப்பற்றிக் கொண்டது. இதனை கண்ட டிராக்டர் டிரைவர், துரிதமாக செயல்பட்டு எரியும் வைக்கோலை கொட்டிவிட்டு, டிராக்டரை சற்று தொலைவில் கொண்டு சென்று நிறுத்தினார். இதனால், டிராக்டர் தப்பியது.

அதேவேளையில், வெயில் சுட்டெரித்ததாலும், காற்று பலமாக வீசியதாலும் வைக்கோலில் தீ வேகமாக பரவியது. இதுகுறித்த தகவலின்பேரில், குமாரபாளையம் தீயணைப்பு நிலைய அலுவலர் செங்கோட்டுவேல் தலைமையிலான வீரர்கள், விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுப்படுத்தினர். ஆனாலும்  ₹10 ஆயிரம் மதிப்பிலான வைக்கோல் எரிந்து சாம்பலானது. மற்றொரு விபத்து: குமாரபாளையத்திலிருந்து வெப்படை செல்லும் வழியில் தனியார் பள்ளி அருகே, சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் பொட்டல் காட்டில் நேற்று திடீர் தீவிபத்து ஏற்பட்டது. சாலையோரம் சமூக விரோதிகள் வைத்த தீ, காய்ந்த புற்களில் பட்டு எரிந்து கொண்டே சென்றது. இதில் விவசாய நிலத்தில் கால்நடை தீவனத்திற்காக வளர்க்கப்பட்ட சோளப்பயிருக்கும் தீ பரவியது. சுமார் 30 ஏக்கர் பரப்பளவில் மளமளவென தீ பரவியதால் அப்பகுதி முழுவதிலும் புகைமூட்டம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த குமாரபாளையம் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை கட்டுப்படுத்தினர்.

Tags : fire ,Kumarapalayam ,
× RELATED அறந்தாங்கியில் தீ தொண்டு நாள் வாரவிழா