×

950 கிராம் நகை கொள்ளையில் குற்றவாளிகள் அடையாளம் சிசிடிவியில் சிக்கியது குற்றப்பிரிவு போலீசாருடன் எஸ்பி ஆலோசனை மாதனூர் அருகே கடந்த 8ம் தேதி நடந்த

மாதனூர், பிப்.11: மாதனூர் அருகே கடந்த 8ம் தேதி நடந்த 950 கிராம் தங்கம், ₹65 ஆயிரம் கொள்ளையில் ஈடுபட்ட குற்றவாளிகள் அடையாளம் சிசிடிவியில் சிக்கியது. இதையடுத்து குற்றவாளிகளை பிடிக்க எஸ்பி பிரவேஷ்குமார் குற்றப்பிரிவு போலீசாருடன் அவசர ஆலோசனை நடத்தினார்.வேலூர் சைதாப்பேட்டை, தேசாய் நாராயண செட்டித் தெருவை சேர்ந்தவர் ஜி.ஓம்ராம்(41), வேலூரில் மொத்த நகை வியாபாரம் செய்து வருகிறார். இவர் வேலூர், மேல்மொணவூர், அனைக்கட்டு, கரடிக்குடி, குருவராஜ பாளையம், ஒடுகத்தூர், ஊசூர், தொரப்பாடி ஆகிய பகுதிகளில் உள்ள நகைக்கடைகளுக்கு நகைகளை சப்ளை செய்து வருகிறார். இதற்காக வாரந்தோறும் சனிக்கிழமைகளில் சென்று கடைகளில் சப்ளை செய்யப்படும் நகைகளுக்கான பணத்தை வசூலிப்பது வழக்கம். கடந்த சனிக்கிழமை வழக்கம்போல் ஓம்ராம் நகைகளுடன், தன்னுடைய தங்கை மகன் ரவி(22) உடன் பைக்கில் சென்றார். மேல்மொணவூர், ஊசூர், கரடிக்குடி நகைக்கடைகளுக்கு சென்றுவிட்டு, ஒடுகத்தூர் பகுதிகளில் உள்ள கடைகளுக்கும் நகைகளை சப்ளை செய்ய சென்று கொண்டிருந்தார்.

மதியம் 1.30 மனியளவில் குருவராஜபாளையம் அடுத்த எல்லப்பன்பட்டி திருப்பதி கெங்கை அம்மன் கோயில் அருகே சென்றபோது, 2 பைக்குகளில் ஹெல்மெட் அணிந்து வந்த 4 பேர் கும்பல், ஓம்ராம் முகத்தில் மிளகாய் பொடியை தூவினர். இதில் நிலைகுலைந்த ஓம்ராமும், ரவியும் சாலையின் பக்கவாட்டில் பள்ளத்தில் பைக்குடன் விழுந்தனர்.அப்போது, ஓம்ராம், ரவி ஆகியோரை கத்தியை காட்டி மிரட்டி 950 கிராம் நகைகள், ₹65 ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவற்றை பைக்குகளில் வந்த 4 பேர் கும்பல் கொள்ளை அடித்துக்கொண்டு தப்பியது.இதுகுறித்து ஓம்ராம் வேப்பங்குப்பம் போலீசில் புகார் அளித்தார். இதுகுறித்து விசாரிக்க 3 தனிப்படைகள் அமைத்து எஸ்பி பிரவேஷ்குமார் உத்தரவிட்டார். தொடர்ந்து தனிப்படையினர் குற்றவாளிகளை தேடி வருகின்றனர். மேலும் அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

இதில் குருவராஜபாளையம் அருகில் உள்ள சிசிடிவி கேமராவில் குற்றவாளிகள் பைக்கில் செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தது. அதில் பைக்கை ஓட்டி சென்றவர் ஹெல்மெட் அணிந்திருந்தார். பின்பக்கம் அமர்ந்திருந்த வாலிபர் ஹெல்மெட்டை கழட்டி கையில் வைத்திருந்தார்.இந்நிலையில், சிசிடிவி காட்சிகள் குறித்து எஸ்பி பிரவேஷ்குமார் குற்றப்பிரிவு போலீசாருடன் நேற்று முன்தினம் வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் அவசர ஆலோசனை நடத்தினார். கொள்ளை கும்பலை சேர்ந்தவர்கள் முகம் சிசிடிவியில் சிக்கியிருப்பதால் போலீசார் அவர்களை கைது செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

Tags : SP ,consultation ,Madanur ,
× RELATED போக்குவரத்து பாதிப்பு...