×

மார்ச் 10ம் தேதி விருத்தகிரீஸ்வரர் கோயில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை

விருத்தாசலம், பிப். 11:      விருத்தாசலம் சப்- கலெக்டர் அலுவலகத்தில் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு மற்றும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. விருத்தாசலம் சப்-கலெக்டர் பிரவீன் குமார் தலைமை தாங்கினார். விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினர் எம்எல்ஏ கலைச்செல்வன், டிஎஸ்பி இளங்கோவன் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் விருத்தாசலத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்த்து விருத்தாசலத்தை போக்குவரத்து நெரிசல் இல்லாத நகரமாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து அதற்கான ஆலோசனைகள் வழங்கப்பட்டது. அதனடிப்படையில் மங்கலம்பேட்டையில் இருந்து விருத்தாசலம் வழியாக கடலூர் செல்லும் பேருந்துகள், வாகனங்கள் புதுக்கூரைப்பேட்டை வழியாக செல்ல வேண்டும். விருத்தாசலத்தில் இருந்து சேலம் செல்லும் பேருந்துகள் மற்றும் வாகனங்கள் செங்கோட்டை வழியாக ஒருவழிப் பாதையாக மாற்றப்பட்டு அதில் செல்ல வேண்டும். அதுபோல் அங்கிருந்து வரும் பேருந்துகள் வடக்கு கோபுர வாசல் வழியாக ஒரு வழிப்பாதையாக விருத்தாசலத்தில் நுழைய வேண்டும். ஸ்டேட் பேங்க் அருகே நிறுத்தப்படும் பேருந்துகள் அங்கு நிறுத்தாமல் சப்- கலெக்டர் அலுவலகம் முன்பு உள்ள பேருந்து நிறுத்தத்தில் நின்று செல்ல வேண்டும்.

விருத்தாசலம் பகுதியில் உள்ள அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களோடு சிறப்பு பேச்சுவார்த்தை கூட்டம் நடத்தி சாலைகளில் இடையூறாக உள்ள தலைவர்களின் சிலைகளை அகற்றி அவைகளை ஒரே இடத்தில் வைக்க வேண்டும். இதற்கான நடவடிக்கையில் இன்னும் ஒரு சில நாட்களுக்குள் இறங்க வேண்டும். அதற்கு அனைத்து துறையைச் சேர்ந்த அதிகாரிகளையும் ஒன்றிணைத்து ஒரு வாட்ஸ் அப் குழு ஒன்று அமைக்க வேண்டும் மார்ச் 10ம் தேதி விருத்தகிரீஸ்வரர் கோயிலில் சுற்றி உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்பட்டது. கூட்டத்தில் எம்எல்ஏ கலைச்செல்வன் கூறும்போது, எனது வீட்டின் பின்புறம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் அதிக அளவில் பன்றிகள் மேய்ந்து வருகிறது. இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை கூறியும் அவர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என நகராட்சியின் குற்றம்சாட்டினார்.  இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து எந்தவித சந்தேகம்  ஆனாலும் புதியதாக உருவாக்கப்பட்டுள்ள வாட்ஸ்அப் குழுவில் அந்தந்த  அதிகாரிகள் பதிவிட வேண்டும் எனவும் முடிவெடுக்கப்பட்டது. சப்-கலெக்டரின்  நேர்முக உதவியாளர் அரங்கநாதன், தாசில்தார் கவியரசு, இன்ஸ்பெக்டர்  பாலகிருஷ்ணன், மோட்டார் வாகன ஆய்வாளர் ரவிச்சந்திரன், விருத்தகிரீஸ்வரர்  கோயில் ஆய்வாளர் லட்சுமி நாராயணன், கணக்காளர் பார்த்தசாரதி, நகராட்சி  கட்டிட ஆய்வாளர் சேகர், மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பலர்  பங்கேற்றனர்.

Tags : invaders ,Vriththakiriswarar Temple ,
× RELATED ஆரியர்கள் படையெடுத்து வந்தவர்கள் அல்ல?: ஐ.ஐ.டி. காலண்டரின் புதிய சர்ச்சை