×

குறிச்சி, குனியமுத்தூர் பகுதிகளில் குடிநீர் திட்டப்பணிகள் மே மாதம் நிறைவடையும்

கோவை, பிப்.11:  குறிச்சி மற்றும் குனியமுத்தூர் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் குடிநீர் திட்டப்பணிகள் வரும் மே மாதமும், பாதாள சாக்கடை திட்டப்பணிகள் அடுத்த ஆண்டு அக்டோபர் மாதமும் ழுமையாக முடிவடைந்து மக்கள் பயனுக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது என தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குனர் டாக்டர் மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.கோவை மாநகராட்சிக்குட்பட்ட குறிச்சி, குனியமுத்தூர் பகுதிகளுக்கான பாதாள சாக்கடை திட்டம் ரூ. 591.14 கோடியிலும் குடிநீர் திட்டப்பணிகள் ரூ. 202.30 கோடியிலும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இத்திட்டங்கள் குறிச்சி மற்றும் குனியமுத்தூர் பகுதிகளில் வார்டு 87 முதல் 100 வரை உள்ள 14 வார்டுகள் பயன்பெறும்  வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனிடையே குறிச்சி மற்றும் குனியமுத்தூர் பகுதிகளில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குனர் டாக்டர் மகேஸ்வரன் பாதாள சாக்கடை திட்டம் மற்றும் குடிநீர் திட்டப்பணிகளை ஆய்வு செய்து, பணிகளை திட்டமிட்டபடி குறித்த காலத்திற்குள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்  என அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இதுகுறித்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குனர் டாக்டர் மகேஸ்வரன் கூறுகையில், ‘‘இதுவரை இந்த பகுதிகளில் குடிநீர் திட்டப்பணிகளில் 82 சதவீதமும், பாதாள சாக்கடை திட்டப்பணிகளில் 43 சதவீதமும் நிறைவடைந்துள்ளன.  பாதாள சாக்கடை திட்டத்தின் சிறப்பு அம்சமாக அனைத்து கழிவு நீரேற்று நிலையங்களிலும் முதன் முறையாக துர்நாற்றம் அகற்றும் கருவி பொருத்தப்பட உள்ளது. மேலும் கழிவுநீர் சேகரிக்கும் குழாய்கள் சாலையில் தோண்டி பதிக்கப்பட்ட உடன் குழிகள் மூடப்பட்டு, சீரான இடைவெளியில் சாலை பகுதியில் காங்கிரீட் தளம் அமைத்து சாலைகள் செப்பனிடப்பட்டு வருகிறது. குடிநீர்திட்டப்பணிகளுக்காக இப்பகுதிகளில் 18 புதிய குடிநீர் மேல்நிலை தொட்டிகளும், 2 குடிநீர் சமநிலை தொட்டிகளும், குடிநீர் பகிர்மான குழாய் பதிக்கும் பணிகளும் நடைபெற்று நிறைவடையும் நிலையில் உள்ளது. குடிநீர் திட்டப்பணிகள் வரும் மே மாதமும், பாதாள சாக்கடை திட்டப்பணிகள் அடுத்த ஆண்டு அக்டோபர் மாதமும் ழுமையாக முடிவடைந்து மக்கள் பயனுக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது,’’ என்றார்.

Tags : Trichy ,
× RELATED பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய...