×

பொதுவழி ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி கலெக்டர் அலுவலகம் முன் கிராம மக்கள் தர்ணா

கிருஷ்ணகிரி, பிப்.7:  பொதுவழி ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி, கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகம் முன் கிராம மக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஊத்தங்கரை தாலுகா வெண்ணாம்பட்டி கிராம சர்வே எண்.12/1ல் அரசு புறம்போக்கு பொது வழியை ரவி என்பவர் ஆக்கிரமித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அவரிடமிருந்து பொதுவழியை மீட்டுத்தர கோரி, அக்கிராமத்தை சேர்ந்தவர்கள் ஊத்தங்கரை தாசில்தார், வருவாய் கோட்டாட்சியர், கலெக்டர் ஆகியோரிடம் மனு அளித்தனர். ஆனால், ரவி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் ஆக்கிரமிப்பு நிலத்தை அளந்து கிராம மக்களிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டது.

அதன்படி, கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர், ஊத்தங்கரை தாசில்தார், வட்ட சார் ஆய்வாளர், ஊத்தங்கரை வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் ஊத்தங்கரை டிஎஸ்பி ஆகியோர் ஒருங்கிணைந்து சட்டம்- ஒழுங்கிற்கு பாதிப்பு ஏற்படாதவாறு போலீஸ் பாதுகாப்புடன் நிலத்தை அளவீடு செய்து கிராம மக்களிடம் ஒப்படைக்குமாறு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கலெக்டர் உத்தரவிட்டார். பின்னர், டிசம்பர் மற்றும் கடந்த பிப்ரவரி 5ம் தேதி தாசில்தாருக்கும், போலீசாருக்கும் கடிதம் அனுப்பியும் இதுவரை ஆக்கிரமிப்பு அகற்றவில்லை.

இதனை கண்டித்து, வெண்ணாம்பட்டி கிராம மக்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். பின்னர், உடனடியாக ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி, கலெக்டர் அலுவலகம் முன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த அதிகாரிகள், தர்ணாவில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது விரைவில் ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதன்பேரில், அனைவரும் கலைந்து சென்றனர்.

Tags : Village Darna ,Office ,Collector ,
× RELATED குடியிருப்பு பகுதிகளில் கடைசி...