×

போக்குவரத்து நெரிசலால் அவதி சின்ன ஆண்டாங்கோயில் பிரிவு பகுதியில் சிக்னல் அமைக்கப்படுமா?

கரூர், பிப். 7: நான்கு வழிகளில் போக்குவரத்து நடைபெறும் சின்ன ஆண்டாங்கோயில் பிரிவு பகுதியில் சிக்னல் அமைக்கப்படுமா என வாகன ஓட்டிகள் எதிர்பார்த்துள்ளனர். கரூர் பேருந்து நிலையத்தில் இருந்து திருச்சி, திண்டுக்கல் மற்றும் மாவட்ட பகுதிகளுக்கு செல்லும் அனைத்து பேருந்துகளும் பழைய திண்டுக்கல் சாலை, சின்னாண்டாங்கோயில் பிரிவு வழியாக சென்று வருகின்றன.இதேபோல் மதுரை பைபாஸ் சாலை, பெரியார் வளைவு, சின்னாண்டாங்கோயில் போன்ற பகுதிகளில் இருந்து கரூர், ஜவஹர் பஜார் போன்ற பகுதிகளுக்கு செல்லும் அனைத்து வாகனங்களும் சின்ன ஆண்டாங்கோயில் பிரிவுக்கு சென்று பிரிந்து செல்கிறது.இதேபோல் பிரம்மதீர்த்தம், ஜவஹர் பஜார் போன்ற பகுதிகளில் இருந்து மதுரை பைபாஸ் சாலை உட்பட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் வாகனங்களும் இந்த சந்திப்பு பகுதியின் வழியாக செல்கிறது. இந்த பிரிவு சாலையில் நான்கு வழிகளில் போக்குவரத்து நடந்து வருகிறது. காலை மற்றும் மாலை நேரங்களில் அதிகளவு வாகன போக்குவரத்து காரணமாக வாகனங்கள் அனைத்தும் நீண்ட நேரம் நின்று தான் தங்கள் பகுதிக்கு செல்லும் நிலை நிலவி வருகிறது.

இதனால் அவ்வப்போது போக்குவரத்து போலீசார் சீரமைப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த சின்னாண்டாங்கோயில் பிரிவு பகுதியில் சிக்னல் அமைக்கும் வகையில் முதற்கட்ட ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டு பாதியிலேயே விடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே இந்த சந்திப்பு பகுதியில் அடிக்கடி நிலவி வரும் போக்குவரத்து பிரச்னையை சரி செய்ய சிக்னல் அமைத்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டுமென வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பகுதி சாலையை பார்வையிட்டு தேவைப்படும் பட்சத்தில் சிக்னல் அமைக்க தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டுமென அனைவரும் எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : section ,traffic junction ,
× RELATED 370வது பிரிவு ரத்துக்கு எதிரான மறுஆய்வு...