×

கிருதுமால் நதி எல்லை, ஆக்கிரமிப்பு, கழிவுநீர் கலப்பு அளவிடும் பணி துவங்கியது

மதுரை, பிப். 7: மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவை தொடர்ந்து நகரின் கிருதுமால் நதியின் எல்லை அளவீடு செய்து கழிவுநீர் கலப்பது, ஆக்கிரமிப்பு உள்ளிட்டவைகளை கணக்கிடும் பணி துவங்கியது. மதுரையில் வைகை நதிக்கு அடுத்த அதன் கிளையாக பெரிய நதியாக ஒடியது கிருதுமால் நதி. புராண சிறப்புமிக்க இந்நதி வைகையின் தென் பகுதி மக்களுக்காக உருவானது. இந்த நதி துவரிமானின் கண்மாய் பகுதியில் உற்பத்தியாகி அச்சம்பத்து, விராட்டிபத்து, பொன்மேனி, எல்லீஸ்நகர், தெற்குவாசல், கீரைத்துறை, சிந்தாமணி வழியாக மதுரையை கடந்து கரிசல்குளம், கொந்தகை கண்மாயை அடைந்து கீழவலசை என்ற இடத்தில், குண்டாற்றில் கலக்கிறது. மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 3 மாவட்டங்களில் 200 கிமீ தூரம் இந்நதி பயணிக்கிறது.. வைகையில் வெள்ளம் வரும்போது, இந்த நதியிலும் வெள்ளம் ஓடியுள்ளது. விரகனூர் மதகு அணைக்கு முன்பாக உள்ள வடிகால் வழியாக பாயும் உபரிநீர் கிருதுமால் நதிக்கு சென்று, பல்வேறு கண்மாய்கள் மூலம் 40 ஆயிரம் ஏக்கருக்கு மேல் விளைநிலம் பயன்பெற்றது. 30 ஆண்டுகளுக்கு முன் நிலத்தடி நீருக்கும், பாசனத்துக்கும் பயன்பெற்ற கிருதுமால்நதி, தற்போது சீரழிந்து கிடக்கிறது. மதுரை நகரில் மட்டும் இந்த நதி முன்பு 120 அடி அகலத்தில் சுமார் 30 கிலோ மீட்டர் தூரம் ஓடுகிறது.

தற்போது இந்த நதியின் இரு கரையும் ஆக்கிரமிப்பு ஏற்பட்டு 30 அடியாக குறுகி, சாக்கடையாக ஓடி கொண்டிருக்கிறது. பைபாஸ் ரோடு, எல்லீஸ்நகர், அழகப்பன்நகர், கீரைத்துறை, சிந்தாமணி பகுதிகளில் உள்ள சிறு தொழிற்சாலைகளின் கழிவு, சாயப்பட்டறை, தோல் பட்டறை கழிவு, ஆடு, மாடு, கோழி, பன்றி போன்றவற்றின் இறைச்சி கழிவுகள் நேரடியாக கலக்கின்றன. பாதாளசாக்கடை கழிவுநீரும் பல இடத்தில் கலக்க விட்டுள்ளனர். கிருதுமால் நதி அசுத்தம் ஆவதற்கு மாநகாரட்சியே மிகப்பெரிய காரணம். மேலும் நதியின் ஆக்கிரமிப்பை அகற்றவும் மாவட்ட நிர்வாகம் முன்வரவில்லை. இந்நிலையில் கிருதுமால் நதி உள்ளிட்ட நகரில் உள்ள 33 நீர்நிலைகள் பழைய எல்லைகளை அளந்து ஆக்கிரமிப்பு, கழிவுநீர் கலப்பது தொடர்பாக கணக்கெடுப்பு நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும்படி மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. அதன்படி வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, நிலஅளவைத்துறை, மாநகராட்சி ஆகிய அதிகாரிகள் நேற்று கிருதுமால் நதி முகப்பு பகுதியான விராட்டிபத்தில் இருந்து அளவெடுத்தனர். எத்தனை இடங்களில் கழிவு நீர் கலக்கிறது மற்றும் ஆக்கிரமிப்புகள் குறித்தும் இவர்கள் கணக்கெடுப்பு நடத்தி வருகின்றனர். தொடர்ந்து நதி ஓடுபாதை முழுவதும் இக்கணக்கிடும் பணி நடக்கவுள்ளது.

Tags : river border ,
× RELATED உலக கால்நடை தின விழா