×

குந்தா வனச்சரகத்தில் காட்டுத்தீ பரவலை தடுக்க தீத்தடுப்பு கோடுகள்

மஞ்சூர், பிப்.7: வறட்சியின் தாக்கத்தால் காட்டுத்தீ பரவும் அபாயத்தை தவிர்க்க குந்தா வனச்சரகத்திற்குட்பட்ட பகுதிகளில் தீத்தடுப்பு கோடுகள் அமைக்கப்பட்டு வருகிறது. மஞ்சூர் அருகே உள்ளது கிண்ணக்கொரை தமிழக-கேரளா எல்லையை ஒட்டி அமைந்துள்ள இப்பகுதியை சுற்றிலும் இரு மாநிலத்திற்கு சொந்தமான அடர்ந்த காடுகள் ஏராளமாக உள்ளன. இந்த காடுகளில் விலை உயர்ந்த மரங்கள், நெல்லிக்காய், கடுக்காய் கொண்ட மருத்துவ குணம் கொண்ட மரங்களுடன் வனவிலங்குகளும் ஏராளமாக உள்ளன.  இந்நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு மேலாக நீடித்து வரும் பனியின் தாக்கத்தால் வனப்பகுதிகளில் கடும் வறட்சி நிலவி வருகிறது. மரம், செடி, கொடிகள், புல்வெளிகள் காய்ந்து கருகிபோயுள்ளன. வனத்தில் உள்ள நீர் நிலைகளும் வறண்டு போயுள்ளதால் குடிநீர் மற்றும் இரைகளை தேடி வனவிலங்குகள் இடம் பெயர்ந்து வருகின்றன. மேலும் வறட்சியால் வனப்பகுதிகளில் காட்டுத்தீ பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் இப்பகுதிகளில் வறட்சியின் காரணமாக பெரிய அளவில் காட்டுத்தீ ஏற்படுவது வாடிக்கையாக உள்ள நிலையில் நடப்பாண்டு காட்டுத்தீ பரவலை தவிர்க்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக குந்தா வனச்சரகத்திற்குட்பட்ட வனப் பகுதிகளில் தீத்தடுப்பு கோடுகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து குந்தா ரேஞ்சர் சரவணன் கூறியதாவது:- குந்தா வனச்சரகத்திற்குட்பட்ட மேலூர், ஒசட்டி, தேவர்சோலை வடக்கு, மீக்கேரிபீட் மற்றும் தாய்சோலை, கிண்ணக்கொரை எல்லையோர வனப்பகுதிகளில் வறட்சியால் ஏற்படும் காட்டுத்தீ பரவலை தீத்தடுப்பு கோடுகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக தாய்சோலை காப்புகாடு, தேவர்சோலை காப்புகாடு மற்றும் தாய்சோலை சாலையோரங்களில் தீத்தடுப்பு கோடுகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் வனப்பகுதிகளில் காட்டு தீ ஏற்படாமல் தடுக்க வனத்துறையினர் ரோந்து, கண்காணிப்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள் என்றார்.

Tags : wildfire spread ,forest ,Kunta ,
× RELATED பழநி வனப்பகுதி எல்லைகளில் யானைகள் நடமாட்டம் அதிகரிப்பு