×

கேரளாவில் இருந்து கோவைக்கு வரும் வாகனங்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரம்

கோவை, பிப். 7: கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிப்பை தொடர்ந்து கேரளாவில் இருந்து கோவைக்கு வரும் பேருந்துகள், வாகனங்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் நேற்று மேற்கொள்ளப்பட்டது. கேரள மாநிலத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தமிழக-கேரள எல்லையில் கண்காணிப்பு பணிகளை சுகாதாரத்துறை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில்  வாளையாறு, ஆனைகட்டி, மீனாட்சிபுரம், வேலந்தாவளம் உள்ளிட்ட தமிழக-கேரள எல்லை பகுதியில் உள்ள சோதனைச்சாவடிகளில் கடந்த 3ம் தேதி முதல் சிறப்பு மருத்துவ குழுவினர் கொரோனா வைரஸ் கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் பேருந்துகள், சுற்றுலா டிராவல்ஸ் வாகனங்களில் வைரஸ் பாதிப்பை தடுக்க அடிக்கடி கை கழுவ வேண்டும் எனவும், கைகழுவும் முறைகள் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். மேலும், காய்ச்சல், சளி உள்ளிட்ட பாதிப்புகள் இருக்கும் நபர்களை கண்டறிந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்நிலையில், தற்போது கேரளாவில் இருந்து கோவைக்குள் நுழையும் பேருந்துகள், டிராவல்ஸ் வாகனங்கள் என வரும் அனைத்து வாகனங்களிலும் கிருமி நாசினி உள்ளிட்ட தடுப்பு மருந்துகள் தெளிக்கப்பட்டு வருகிறது. இதில், பேருந்துகளில் படிக்கட்டு பகுதியில் உள்ள கைப்பிடிகள், பேருந்தின் உள் பகுதியில் உள்ள கைப்பிடிகளில் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. பயணிகளுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களும் அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், விமான நிலையம், கோவை ரயில் நிலையம், பேருந்து நிலையங்கள், மால், தியேட்டர் என பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  இது குறித்து கோவை மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் ரமேஷ்குமார் கூறியதாவது: கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக மாவட்டம் முழுவதும் தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. கேரளாவில் இருந்து கோவைக்கு வரும் வாகனங்கள், கோவை மாநகர் பகுதியில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. ‘

சீனாவில் இருந்து கோவைக்கு வந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ள சீனா நாட்டை சேர்ந்த 4 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் ஆரோக்கியமாக உள்ளனர். அவர்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். கொரோனா வைரஸ் தொடர்பாக பொதுமக்கள் பீதியடைய தேவையில்லை. தடுப்பு பணிகள் அனைத்தும் முழுவீச்சில் நடந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : spraying ,Coimbatore ,Kerala ,
× RELATED பாமக நிர்வாகிக்கு கொலை மிரட்டல் மைவி3...