×

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனை கண்டித்து கூடலூரில் இன்று ஆர்ப்பாட்டம்

கூடலூர், பிப்.7: நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காட்டில் நேற்று வளர்ப்பு யானைகளுக்கான நல்வாழ்வு புத்துணர்வு முகாம் துவங்கியது. முகாமை துவக்கி வைக்க வந்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தனது செருப்பை ஆதிவாசி சிறுவர்களை கழற்ற செய்ததால் சர்ச்சை ஏற்பட்டது. இச்சம்பவத்திற்காக அமைச்சர் மன்னிப்பு கேட்டுள்ள நிலையில் இப்பிரச்னை தொடர்பாக தெப்பக்காட்டில் நேற்று மாலை ஆதிவாசிகள் சங்கம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் நடவடிக்கையை கண்டித்து அவர் மீது வழக்கு தொடுக்கவும், நாளை (இன்று) கண்டன போராட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக கூடலூர் எம்.எல்.ஏ. திராவிட மணி தலைமையில் கூடலூரில் நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சரின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. பிரச்னைக்கு பொறுப்பு ஏற்று அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் அமைச்சரின் நடவடிக்கையை கண்டித்து நாளை (இன்று) கூடலூர் வன அலுவலகம் முன்பாக அரசியல் கட்சிகள் மற்றும் ஆதிவாசி மக்களை திரட்டி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Tags :
× RELATED ஊட்டியில் 2 மணி நேரம் மழை கொட்டி...