×

பாதாள சாக்கடை அடைப்பால் பஸ் நிறுத்த பகுதியில் கழிவுநீர் தேக்கம் : துர்நாற்றத்தால் பயணிகள் தவிப்பு

தாம்பரம்: குரோம்பேட்டை பஸ் நிறுத்த பகுதியில் பாதாள சாக்கடை அடைப்பால், கழிவுநீர் வெளியேறி சாலையில் தேங்குவதால் துர்நாற்றத்தில் பயணிகள் சிரமப்படுகின்றனர். குரோம்பேட்டை ஜிஎஸ்டி சாலையில் ஏராளமான ஓட்டல்கள், விடுதிகள் மற்றும் தனியார் வணிக வளாகங்கள் மற்றும் பஸ் நிறுத்தம் ஆகியவை உள்ளன. இங்கு, தினசரி நூற்றுக்கணக்கான மக்கள் வந்து செல்வதால், எப்போதும் பரபரப்பாக காணப்படும். இந்நிலையில், பஸ் நிறுத்தம் அருகே உள்ள பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால், மேன்ஹோல் வழியாக கழிவுநீர் வெளியேறி ஜிஎஸ்டி சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இதனால் அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுவதுடன் கொசு உற்பத்தி அதிகரித்து பொதுமக்கள் கொசு தொல்லையால் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் சார்பில் பல்லாவரம் நகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் அவர்கள் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை, என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘குரோம்பேட்டை, ஜிஎஸ்டி சாலையில் பஸ் நிறுத்தம் அருகே பாதாள சாக்கடை மேன்ஹோலில் இருந்து கழிவுநீர் வெளியேறி சாலையில் ஓடுவதால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் சாலையில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் கொசு உற்பத்தி அதிகரித்து வருகிறது. இதனால் மர்ம காய்ச்சல் ஏற்படும் பீதி ஏற்பட்டுள்ளது. கொசு தொல்லையால் மர்ம காய்ச்சல் ஏற்பட்டு பொதுமக்கள் பாதிக்கப்படுவதற்கு முன்பு சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.


Tags :
× RELATED ₹621 கோடி மதிப்பீட்டில், 3...